குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 15வது குடியரசு தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த திரௌபதி முர்மு கடந்த மாதம் பதவியேற்றுக்கொண்டார். இதனையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இரண்டு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நேரில் வர முடியாததால் சமூக வலைதள பக்கத்தில் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததை தொடர்ந்து டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறாது. குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இருவரும் சந்தித்து பேசுவது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.