• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கடன் தொல்லை காரணமாக மகன் மற்றும் தாய் சயனைடு சாப்பிட்டு தற்கொலை

By

Sep 12, 2021 , ,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடன் தொல்லை காரணமாக மகன் மற்றும் தாய் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (48). இவர் ராமவர்மபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருடன் அவரது தாய் சாந்தகுமாரி ( 70), மனைவி மஞ்சுளா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளும் வசித்து வந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பார்வதிபுரம் பகுதியில், தங்க நகைகள் வைக்கும்  பெட்டிகள் தயார் செய்யும் சிறிய தொழிற்சாலையை தொடங்கி நடத்தி வந்துள்ளார். தொழில் முதலீடு மற்றும் பிற தேவைகளுக்காக சுரேஷ்குமார் வெளி நபர்களிடம் கடன் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொழில் நலிவடைந்ததால்,  வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திண்டாடி வந்துள்ளார்.

இந்த சமயத்தில் தான் நேற்று மாலை திருமண நிகழ்ச்சிக்காக மனைவி மஞ்சுளா மற்றும் மகள் சென்றுள்ளனர். அதனையடுத்து ஏற்கனவே தான் திட்டமிட்டிருந்தது போலவே சுரேஷ் குமார்  வைத்திருந்த சயனைடை  தாய்   சாந்தகுமாரிக்கும் சாப்பிட கொடுத்து தானும் சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார்.திருமண நிகழ்ச்சியிலிருந்து வீடு திரும்பிய சுரேஷ்குமாரின் மனைவி, கணவன் மற்றும் மாமியார் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த தகவலறிந்து விரைந்து வந்த நேசமணி நகர் போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடன்தொல்லை காரணமாகவே தாய், மகன் இருவரும் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.