
சிவகங்கையில் உலகப்பொதுமறையாம் திருக்குறளின் 1330 குறட்பாக்களுக்கும் களிமண் மற்றும் காகித உருவ மாதிரிகளை செய்து வந்து காட்சிபடுத்தி ஒரே நேரத்தில் பள்ளி மாணவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கவுரை சமர்ப்பித்து உலக சாதனை புரிந்தனர்.
சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி பள்ளியில் 3 முதல் 11ஆம் வகுப்பு வரை படிக்கும் 262 மாணவர்கள் ஒன்றிணைந்து 1330 குறட்பாக்களுக்கும் விளக்கங்களை காட்சிப்படுத்தும் விதமாக களிமன் மற்றும் காகித பொம்மைகளை செய்து வந்தனர்.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் சார்பில் மதிப்பீட்டாளர் குழுவினர் மாணவர்களின் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களின் குறள் திறன்களை மதிப்பீடு செய்தனர். ஒவ்வொரு மாணவர்களும் தங்களது படைப்பினை முன்னிறுத்தி 133 அதிகார வரிசைப்படி குறட்பா, விளக்கம், ஆங்கில மொழிபெயர்ப்பு என திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தலைவர் நீலமேகம் நிமலன், அந்நிறுவன பொதுச்செயலாளர் ஆர்த்திகா, தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், பெருமாள், சோழன் உலக சாதனையாளர் முத்துக்காமாட்சி, விழித்தெழு அறக்கட்டளை நிறுவனர் தினேஷ்குமார், உலகத்திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் அறக்கட்டளை பொதுச்செயலாளர் தங்க.ஆதிலிங்கம், தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், மெய்யாண்டவர் ஆகியோர் வகுப்பு வாரியாக மாணவர்களை மதிப்பிடு செய்தனர்.

மூன்று மணிநேர ஆய்வுகள் முடிந்ததும், நிகழ்வின் இறுதியில் நடைபெற்ற விழாவில் மாணவர்களின் கண்காட்சியானது சோழன் உலக சாதனை புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டு உலகசாதனை நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டது. பள்ளிக்கான சோழன் உலக சாதனை புத்தக நிறுவன அங்கீகாரச் சான்றிதழை சிவகங்கை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் பள்ளித் தலைவர் பால.கார்த்திகேயனிடம் வழங்கினார். இந்நிகழ்வில் பங்கேற்ற 262 மாணவர்களுக்கான சோழன் உலக சாதனை புத்தக சான்றிதழ்களை தமிழ்ச்செம்மல் பகீரதநாச்சியப்பன், சிவகங்கை உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் செயலாளர் காளிராஜா, துணைத்தலைவர் முருகாணந்தம், ஶ்ரீ ரமணவிகாஸ் மேனிலைப்பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன், மன்னர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுந்தர்ராஜன், மனித சமூக விழிப்புணர்வு அமைப்பின் நிறுவனர் விஜயபாண்டி, மூத்த வழக்கறிஞர் ராம் பிரபாகர், இந்திய செஞ்சிலுவைச்சங்கம் மாவட்டதுணைத் தலைவர் முத்துப்பாண்டி, ஶ்ரீ பாலமுருகன் மழலையர் பள்ளி தாளாளர் குமார், ஜேசிஐ தேசிய இயக்குனர் ஜெயப்பிரகாஷ், பாரதி இசைக்கல்வி கழக நிறுவனர் யுவராஜ் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் கலைக்குமார், செந்தில்குமார், தெட்சிணாமூர்த்தி, ராமதாஸ், கலைப்பிரிவு இயக்குநர் கங்கா கார்த்திகேயன், தமிழாசிரியைகள் சரண்யா, ஜெயப்ரியா, குணாலி மற்றும் ஆசிரியர்கள் ஊழியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பெற்றோர்களும் தமிழார்வலர்களும் திரளாக கலந்து கொண்டு மாணவர்களின் முயற்சிகளை வெகுவாக பாராட்டினர்.

