• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

‘ஐயா எங்களை புதைக்க இடம் வேண்டும்’ – மனு கொடுத்த இஸ்லாமியர்கள்..!

மதுரையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில், ‘ஐயா, எங்களை புதைக்க இடம் வேண்டும்’ என இஸ்லாமியர்கள் உருக்கமாக மனு அளித்திருப்பது அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.
இதுகுறித்து, மனு கொடுத்த இஸ்லாமியர்கள் சிலர் தெரிவித்ததாவது..,
மதுரை வடக்கு தாலுகா, ஆனையூர், சிலையனேரி மஸ்ஜிதே இப்ராஹிம் ஜும் ஆ தொழுகை பள்ளிவாசல் பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள ரயிலார் நகர், விளாங்குடி, தினமணி நகர் மற்றும் கோவில்பாப்பாக்குடி ஆகிய பகுதிகளிலும் சுமார் 1300க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் குடியிருந்து வருகிறோம். எங்கள் பகுதிகளில் ஒருவர் இறந்து விட்டால், அவரது உடலை 10 கி.மீ தூரத்தில் உள்ள மஹபூப்பாளையம் இடத்தில் உள்ள மையமாடிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்து வந்தோம். தற்போது அந்த இடம் கடந்த ஆண்டுகளாக மண் மக்கி அழிந்து விட்டால், அடக்கம் செய்யப்படும் உடல்கள் மக்குவதற்கு அதிக காலம் எடுக்கின்றது. வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல் ஜமாத்தினரின் இறந்த உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது. நீங்கள் அரசாங்கத்திடம் முறையிட்டு, இடம் பெற்று அடக்கம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்கள்.
எங்கள் பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட உபயோகத்தில் இல்லாத இடத்தை எங்களது அனைத்து பகுதி இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலத்துக்கு ஒதுக்கீடு செய்து தரக் கேட்டு உரிய அலுவலர்கள், வணிகவரித்துறை அமைச்சர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கும் மனுக்கள் கொடுத்தும் இன்னும் இடம் ஒதுக்கித் தராமல் காலம் தாழ்த்திக் கொண்டே வருகிறார்கள். அமைச்சர்களிடம் ஒவ்வொரு முறையும் மனு கொடுக்கும் போதும் உரிய ஏற்பாடுகள் செய்து தருகிறேன் என்று உறுதி அளிக்கிறார்கள். ஆனால், ‘சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்காத கதையாக’, அமைச்சர்கள் உறுதி அளித்தாலும், அதிகாரிகள் எங்களுக்கு அடக்கஸ்தலத்துக்கு உரிய இடம் ஒதுக்கித் தர மறுக்கின்றனர். இதனால் நாங்கள் மனவேதனையில் வார்த்தைகளால் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருகிறோம். இப்போது ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தின் மூலம், நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மனுக்களை அளித்துள்ளோம். ஆகவே, இந்த அரசு உடனடியாக எங்கள் மனு மீது கருணையோடும், தாயுள்ளத்தோடும் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுத்து, எங்களை புதைக்க இடம் ஒதுக்கீடு செய்து தருமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்’ என்று உருக்கமாக அவர்கள் தெரிவித்தது அங்கு கூடியிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது. 
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படுமா? சிறுபான்மையினரின் நலன் காப்பாரா? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். 
பொறுத்திருந்து பார்ப்போம்.