• Sun. Mar 16th, 2025

தேசியகொடியை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதா? சபாநாயகர் அப்பாவு வேதனை

ByA.Tamilselvan

Aug 27, 2022

கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது சபாநாயகர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டு சபாநாயகர்கள், மாநிலங்களின் சபாநாயகர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவில் இருந்து பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, தமிழக சபாநாயகர் அப்பாவு ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டு வளாகத்துக்கு சபாநாயகர்கள் சென்றபோது தங்கள் நாட்டு தேசியக் கொடியை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.
அப்போது, இந்திய சபாநாயகர்கள் கையில் பிடித்திருந்த தேசியக் கொடியில் ‘மேட் இன் சீனா’ என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றி சபாநாயகர் அப்பாவுவிடம் கேட்டபோது, “இந்தியாவின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் தேசியக் கொடிகளை ஏந்தியபடி சென்றோம்.அந்த கொடிகளில் ‘மேட் இன் சீனா’ என்று இருந்தது. அதை, பாராளுமன்ற சபாநாயகரிடம் தெரிவித்தோம். எல்லோருக்கும் கஷ்டமாக இருந்தது. இந்திய தேசியக் கொடியை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இந்தியாவில், குறிப்பாக சிவகாசி, ஈரோடு, கரூர், நாமக்கல் பகுதிகளில் நிறைய அச்சகங்கள் உள்ளன. இரவு சொன்னால் காலையில் 100 கொடியை தருவார்கள். ஆனால் இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை” என்றார்.