



ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்
தமியர் உறங்கும் கௌவை யின்றாய்
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே
முனாஅ தியானையங் குருகின் கானலம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்
குட்டுவன் மரந்தை யன்னவெம்
குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே.
பாடியவர்: கொல்லிக் கண்ணனார்.
திணை: மருதம்

பாடலின் பின்னணி:
தலைவனைச் சிலகாலமாகக் காணவில்லை. ஆகவே, தலைவி வருத்தத்துடன் உடல் மெலிந்து உறக்கமின்றி வாடுகிறாள். அவள் நிலையைக் கண்ட அவள் பெற்றோரும் மற்றவர்களும் அவளை இகழ்ந்தார்கள். அவள் காதலன் அவளைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறான் என்ற செய்தி தோழிக்குத் தெரிய வந்தது. “நீ யாரை விரும்பினாயோ அவனே உன்னைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறான், ஆகவே இனி எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம்” என்று கூறித் தோழி, தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
உன்னுடைய நிலையைக் கண்டு வருத்தமடைந்த உன் பெற்றோர்கள் உன்னை இகழ்ந்தார்கள். உன்னுடைய நிலையைப் பற்றித் தெளிவாகத் தெரியாத மற்றவர்கள் நீ கூறியதை மறுத்தார்கள். பகைவரை வென்ற வீரர்களின் போர் முழக்கத்தைக் கேட்டுக் கடற்கரையில் உள்ள யானையங்குருகுகளுடைய கூட்டம் அஞ்சும் இடமாகிய சேரன் குட்டுவனுக்குரிய மரந்தை என்னும் நகரத்தைப் போல் நீ அழகுடன் விளங்குகிறாய். உன் சுருண்ட முடி தவழும் அழகிய நெற்றிக்கு உரிமையுடயவன் உன்னுடைய தலைவனே ஆவான். அவன் உன்னைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறான். ஆகவே, இனி நீ தலைவனைப் பிரிந்து தனிமையில் உறங்கும் துன்பமில்லாமல் இல்லாமல் இருக்கலாம். இந்த ஊரில் உள்ள மற்றவர்களும் இந்த இனிய செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடையலாம்.

