



உசிலம்பட்டி அருகே கனமழையால் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக உயிர்பலி ஏற்படாத சூழலில் 1 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் சேதமடைந்தன.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை வடக்கு காலணி பகுதியில் 200க்கும் அதிகமான அருந்ததியர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர்.,

இந்த மக்களுக்கு கடந்த 1999 முதல் 2005 கால கட்டத்தில் அரசால் 26 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இந்த வீடுகள் சிதிலமடைந்து கடந்த 2018-19 காலகட்டத்தில் 50 ஆயிரம் அரசு நிதியின் மூலம் பராமரிப்பு பணியும் செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக உசிலம்பட்டி பகுதியில் கனமழை பெய்து வரும் சூழலில், இன்று காலை இராமர் என்பவரது வீடு முற்றிலுமாக இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் இருந்த 6 பேரும் வீட்டின் முன் அமர்ந்திருந்த சூழலில் உயிரிழப்புகள் ஏதுமில்லை., மேலும் வீட்டினுள் இருந்த பிரோ, பாத்திரங்கள் மற்றும் இராமனின் மகன் பால்பாண்டியின் டிரம்செட் உபகரணங்கள் என சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் இடிபாடுகளில் சிக்கி சேதமடைந்துள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதே பகுதியில் உள்ள பாண்டியம்மாள், அழகர், பவானி, கிருஷ்ணன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரின் வீடுகளும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுவதாகவும், மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு மற்றும் புதிய வீடுகள் கட்டித் தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

