ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். அந்த படத்தை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். சமீபத்தில் ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிக்கப் போவதாக மிகப்பெரிய அறிவிப்பை கே.டி. குஞ்சுமோன் வெளியிட்டார். ஆனால், படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதை அறிவிக்கவில்லை. அர்ஜுன் அந்த படத்தில் நடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. நாயகியாக நயன்தாரா சக்கரவர்த்தி நடிக்க உள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார் கே.டி.குஞ்சுமோன்.
சில வருடங்களாக இயக்குநர் ஷங்கருக்கும் கே.டி. குஞ்சுமோனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும் ஜென்டில்மேன் 2 படத்தை இயக்க கோரிக்கை விடுத்த நிலையில், ஷங்கர் அதை ஏற்காதது தான் பிரச்சனை என்கின்றனர். இந்நிலையில், தற்போது அந்த பிரச்சனையை சரி செய்ய இயக்குநர் ஷங்கர் முடிவு செய்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் தனது மனைவியுடன் கே.டி. குஞ்சுமோன் இல்லத்திற்கு சென்று ஆசி பெற்றுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. மேலும், ஒரு சந்தோஷமான நிகழ்ச்சிக்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக கூறுகின்றனர்.
கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் கொரோனா காலத்தில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பல பிரபலங்களை அழைத்து பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சியை வரும் மே 1ம் தேதி நடத்த ஷங்கர் ஏற்பாடு செய்துள்ளாராம். நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப் போகிறாராம் ஷங்கர்.