மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30,000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் ஜெனக நாராயண பெருமாள் கோவில் ஐயப்பன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் உள்ள சோழவந்தானின் மையப்பகுதியில் தினசரி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை பேரூராட்சி நிர்வாகம் மூலம் அகற்றப்பட்டது. ஆனால் மீண்டும் ஒரு சில இடங்களில் பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது குறிப்பாக வாகனங்கள் செல்ல முடியாத அளவில் சாலையின் மையப்பகுதி வரை ஆக்கிரமிப்புகள் உள்ளதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இந்தப் பகுதியில் உள்ள ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் காலை முதல் இரவு வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர் இதன் காரணமாக இரு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் இந்த பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதாக கூறுகின்றனர் வாகனங்களை மாற்று இடத்தில் நிறுத்துவதற்கு முன்னேற்பாடு செய்யாத நிலையில் காலை முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது

இந்த பகுதியில் தொடர்ச்சியாக இருந்து வரும் ஆக்கிரமிப்பு காரணமாகவும் பேருந்துகள் எதிரெதிரே செல்ல முடியாத அளவில் சாலை ஓரம் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆகையால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் பக்தர்கள் சிரமம் இன்றி கோவிலுக்கு வந்து செல்லும் வகையிலும் மாரியம்மன் மற்றும் ஜெனக நாராயண பெருமாள் கோவில் முன்பாக போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த்துறையினர் பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




