• Wed. Apr 24th, 2024

கோவை மேயர் பதவிக்கு ஸ்கெட்ச் போடும் செந்தில் பாலாஜி

கோவை மேயர் பதவியை கைபற்ற திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி பக்காவாக ப்ளான் போட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. அதனைத்தொடர்ந்து, 2024இல் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சியமைக்க வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார். அதற்காக கட்சி கட்டமைப்பை இப்போதிலிருந்தே வலுப்படுத்தினால்தான் சரியாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் கோவையில் திமுக மிகவும் பலவீனமாக உள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டத்துக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, கொங்கு மண்டல கட்சி பொறுப்பு கைக்கு வந்ததும் அங்கு முகாமிட்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.மேலும் உள்ளடி வேலைகளை சொந்த கட்சியினரே செய்வார்கள் என்பதால் கரூர் ஐடி விங்கை கோவையில் களம் இறக்கி உள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

இந்த சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் இருக்கும் 100 வார்டுகளிலும் வெற்றி பெற்று கோவை மாநகராட்சி மேயர் பதவியை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்று செந்தில் பாலாஜி தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 1,290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பூத்துக்கும் தலா 10 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்கப்படுகிறது. அந்தந்த ஏரியாவை சேர்ந்தவர்களை, மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களை உறுப்பினர்களாக நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பூத்துக்கும் பொறுப்பாளராக, கரூர் மாவட்ட நிர்வாகிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நியமித்திருக்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் சொந்த கட்சியினரே உள்ளடி வேலை பார்த்ததால்தான் தோல்வி கிடைத்ததாகவும், அதனை கருத்தில் கொண்டு தற்போது வெற்றி மட்டுமே முக்கியம் என்ற ரீதியில் செந்தில் பாலாஜி பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.


செந்தில் பாலாஜி கொங்கு மண்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட போதே உள்ளூர் நிர்வாகிகளிடம் அதிருப்தி நிலவியது. எனவே, அவர்கள் ஏதேனும் உள்ளடி வேலை பார்த்து, தேர்தல் தோல்விக்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்து விடக் கூடாது என்பதால் கரூர் நிர்வாகிகளை செந்தில் பாலாஜி நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *