வாக்கிங் தொடங்கியதும் சண்முகம் தனது மொபைலை எடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பிறகு பாண்டியன் பக்கம் திரும்பி பேசத் தொடங்கினார்.
“செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி ராஜினாமா செய்தார். இப்போது அவர் திமுகவில் கரூர் மாவட்டச் செயலாளராகவும், மேற்கு மண்டலப் பொறுப்பாளராகவும் இருக்கிறார். கரூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.
அவருக்கு எதிரான ஊழல் வழக்கில் சாட்சியங்களை அமைச்சர் பதவியை வைத்து கலைத்துவிடுவார் என்று அமலாக்கத்துறையும் வித்யா குமார் என்பவரும் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைப்படி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில்பாலாஜி.
மின்சாரம், மதுவிலக்கு என அவர் வகித்து வந்த இரு பெரும் துறைகளையும் இப்போது சிவசங்கர்,. முத்துசாமி ஆகியோர் வகித்து வருகிறார்கள். அவர்கள் பெயரளவுக்குத்தான் அந்தத் துறைகளுக்கு அமைச்சர்கள், மற்றபடி செந்தில்பாலாஜி போட்டுக் கொடுத்த ரூட் மேப்பின்படிதான் அந்த அமைச்சகங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.
அரசியல் ரீதியாகவும் கரூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏவாக இருந்தபோதும் அரசு விழாக்களில் கலெக்டருக்கு இணையாக செந்தில்பாலாஜியே முன்னிறுத்தப்பட்டு வந்தார்.
இந்த பின்னணியில்தான் ஜூலை 9 ஆம் தேதி கரூர் பிரேம் மஹால் மண்டபத்தில், கரூர் மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கரூர் மாவட்ட திமுக வாக்குச்சாவடி முகவர்கள் (BLA 2), வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA), பூத் இளைஞர் அணியினர், பூத் மகளிர் அணி, பூத் கமிட்டி நிர்வாகிகள் (BLC) என 16000 பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்குபெறும் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் துணை முதல்வர் உதயநிதி.
அப்போது உதயநிதிக்கு தனக்கே உரிய வகையில் மிகப் பிரம்மாண்டமான கூட்டத்தைக் கூட்டி வரவேற்பளித்தார் செந்தில்பாலாஜி. இந்த நிகழ்ச்சியில் செந்தில்பாலாஜியை மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார் உதயநிதி.
உதயநிதியின் கரூர் விசிட்டுக்குப் பிறகு கரூர் திமுகவினரிடத்தில், ‘அண்ணன் செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராகும் நாள் வெகுதூரத்தில் இல்லை’ என்ற பேச்சு கிளம்பிவிட்டது. கரூர் திமுகவினர் செந்தில்பாலாஜி மீது இருக்கும் பற்று பாசத்தில் சொல்லுவார்கள். ஆனால் இதற்கு சட்ட ரீதியாக வாய்ப்பிருக்கிறதா என்று வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது மேலும் சில முக்கிய தகவல்கள் கிடைத்தன.
செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ஏப்ரல் 27 ஆம் தேதி ராஜினாமா செய்தார். அதன் பின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 28 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது ஜாமீனுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆனாலும் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா விடாமல், “இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை பாலாஜி மீண்டும் அமைச்சராகக் கூடாது என நிபந்தனை விதிக்கவேண்டும்” என்று நீதிபதிகள் அபய் எஸ் ஓகே, ஏஜி மாசி ஆகியோர் அடங்கிய அமர்வை வலியுறுத்தினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் இதே போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தகைய நிபந்தனையை நீதிமன்றம் விதிக்காவிட்டால், ஒரு மாதத்திற்குப் பிறகு செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராகிவிடுவார்” என்று கூறினார் துஷார் மேத்தா.
இன்னும் ஒரு படிமேலே போய், நீதிபதி ஓகா மே 24 அன்று ஓய்வு பெறுகிறார். அதை குறிக்கும் வகையில்தான் இன்னும் ஒரு மாதம் கழித்து செந்தில்பாலாஜி அமைச்சராகிவிடுவார் என்ற பொருள்படும்படி அழுத்திக் கூறினார் துஷார் மேத்தா.
அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதி ஓகா “செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராவார் என்பது உங்கள் அச்சமா? அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அவரது ஜாமீனை ரத்து செய்ய நீங்கள் மறுபடியும் விண்ணப்பிக்கலாம்,” என்று நீதிபதி ஓகா பதிலளித்தார்.
இந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஓகா சுட்டிக் காட்டியதைத்தான் இப்போது திமுகவினர் வழக்கறிஞர்களும் சுட்டிக் காட்டுகின்றனர்.
இந்த வழக்கில் கடுமை காட்டிய நீதிபதி ஓகா ஓய்வு பெற்றுவிட்டார். இதுமட்டுமின்றி உச்ச நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி இந்த வழக்கில் தாக்கல் செய்த பதிலில், ஒரு அமைச்சரின் தகுதி நீக்கம் என்பது 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் , தண்டனை விதிக்கப்பட்டவுடன்தான் நடைமுறைக்கு வரும்.
எனவே, குற்றம் நிரூபிக்கப்படும் வரை நீதிமன்றம் அவரை நிரபராதியாகக் கருத வேண்டும். சாட்சிகளை கலைத்ததாக செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு எந்த குறிப்பிட்ட ஆதாரமும் இல்லை என்று கூறியிருந்தார். ஆனபோதும் நீதிபதியின் ஓகா காட்டிய கடுமை காரணமாக செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.
இப்போது வரைக்கும் அந்த வழக்கின் சாட்சியங்களில் செந்தில்பாலாஜியால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் தேர்தலுக்கு முன் ஆறு மாதங்களுக்கு முன்பு செந்தில்பாலாஜி அமைச்சராகிவிட்டால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு யாரும் சென்றால் கூட வழக்கு விசாரணைக்கு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும். அதற்குள் சட்டமன்றத் தேர்தலும் வந்துவிடும்.
சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் செந்தில்பாலாஜி அமைச்சராக இருப்பதையே முதலமைச்சர் ஸ்டாலினும் விரும்புகிறார். அப்போதுதான் செந்தில்பாலாஜியின் முழுமையான தேர்தல் பணிகளை செய்ய முடியும் என்று முதல்வர் கருதுகிறார். எனவே விரைவில் செந்தில்பாலாஜி அமைச்சராக பதவியேற்றாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள்” என முடித்தார்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்ட பாண்டியன், “நேற்று கரூரிலேயே செந்தில்பாலாஜி ஓர் அமைச்சர் போலத்தான் துணை முதல்வர் உதயநிதியால் நடத்தப்பட்டார். கொங்குமண்டலத்தில் தேர்தல் பணியாற்றுவதற்கு அவர் அமைச்சராக இருப்பது பாதுகாப்பானது என்பதுதான் முதல்வரின் விருப்பமும் கூட. எனவே சட்டத்தின் கண்களில் மண்ணைத் தூவி மீண்டும் செந்தில்பாலாஜி அமைச்சர் பதவி ஏற்பதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்றுதான் திமுக தலைமை வட்டாரத்திலும் சொல்கிறார்கள்.
இன்னொரு விஷயமும் இருக்கிறது. அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது செந்தில்பாலாஜியை கடுமையாக எதிர்த்தார். ஆனால் இப்போது அதே அளவுக்கு நயினார் நாகேந்திரன் எதிர்ப்பாரா என்பதும் கேள்விக்குறிதான். எனவே செந்தில்பாலாஜி எப்போது வேண்டுமானாலும் மீண்டும் அமைச்சராகலாம்” என்ற தன் பங்குச் செய்தியை சொல்ல, சண்முகம் பாண்டியன் இருவரும் நடைப் பயணத்தை முடித்து விடைபெற்றனர்.