• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

தமிழகத்திற்கே பேரழிவு – கொதிக்கும் நாம் தமிழர் சீமான்!

Seeman

பாலாற்றில் தொழிற்சாலைக்கழிவுகளைக் கலக்கும் சுத்திகரிப்பு ஆலைகளின் பேரழிவுப்போக்கினை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராணிப்பேட்டை மாவட்டம், மேல்விசாரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் தொழிற்சாலைக்கழிவுகளைச் சுத்திகரிக்காது பாலாற்றில் கலந்துவிடும் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.

தோல் பதனிடுதல், சாயத் தொழில், சர்க்கரைத் தொழில்கள் போன்ற நீர் சார்ந்த தொழில்கள் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் பாலாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. இவற்றில் உருவாகும் இரசாயன கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு, தொழிற்சாலையின் மறுபயன்பாட்டிற்கு உகந்த வகையில் சுத்திகரிக்கப்படவேண்டும். ஆனால் தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத அல்லது ஓரளவு மட்டும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுகளை அதிக அளவில் ஆற்றிலே விடப்படுகிறது. வேலூர், இராணிப்பேட்டை பகுதிகளில் இயங்கிவரும் தோல் தொழிற்சாலைகள் வெளியிடும் கழிவுகள் குறித்துப் பலமுறை நீதிமன்றங்களும், மாசு கட்டுப்பாடு வாரியமும் கண்டித்ததோடு நடவடிக்கைகளும் எடுத்துள்ளன. இருப்பினும் தொடர்ந்து கழிவுகள் பாலாற்றில் கலக்கப்படுவது குறைந்தபாடில்லை.

பாலாற்றில் கலக்கப்படும் இரசாயனக்கழிவுகளால் அப்பகுதியின் நிலத்தடி நீர் முற்றாக மாசடைந்து மக்களின் குடிநீருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு, பாலாற்று நீரை அருந்தும் கால்நடைகளும் உயிரிழக்கும் துயரங்கள் நேர்வது பெரும் வேதனையைத் தருகிறது. அளவுக்கதிகமான கழிவுநீர் கலப்பால் வேளாண்மை செய்யமுடியாத அளவிற்கு நிலம் மாசுப்பட்டு, மலட்டுத்தன்மை அடைந்துள்ளதால், அப்பகுதி விவசாயிகள் வேளாண்மையினை முழுவதுமாகக் கைவிட்டு, மாற்றுவேலைக்குச் செல்ல வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் மிதமிஞ்சிய தொழிற்சாலைக்கழிவுகளால் நிலம், நீர், காற்று என யாவும் பெருமளவு கெட்டு, சுற்றுச்சூழல் முற்றாகச் சீர்குலைவதோடு, பல்வேறு கொடிய நோய்களுக்கும் அப்பகுதியினர் ஆளாகி மக்களின் சுகாதார வாழ்வும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு ஏற்படும் இத்தகைய பாதிப்புகள் குறித்தும், நள்ளிரவு நேரங்களில் தொழிற்சாலைகளிடமிருந்து பெறப்படும் கழிவுநீரைப் பாலாற்றில் கலந்துவிடும் சட்டவிரோதச்செயல்பாடுகள் குறித்தும் பொதுமக்கள் சார்பாகவும், நாம் தமிழர் கட்சி சார்பாகவும் பலமுறை புகாரளிக்கப்பட்டும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது சுத்திகரிப்பு ஆலை நிர்வாகத்திற்குத் துணைபோவது வன்மையான கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி தமிழகத்திற்கு வரவேண்டிய நீர்வளத்தை மறிப்பதாலும், கட்டுப்பாடற்ற தொடர் மணற்கொள்ளையாலும் பாலாறு வறண்டு, ஓடை போலக் குறுகி சுருங்கிவிட்டது. தற்போது நள்ளிரவு நேரங்களில் தொழிற்சாலைகளிடமிருந்து பெறப்படும் கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் தொழிற்சாலைகளுக்குத் தராமல் நேரடியாக ஆற்றிற்குச் செல்லும் ஓடையில் கழிவு நீராகவே கலப்பதால் பாலாறு முற்றுமுழுதாகத் தன்னியல்பையும், உயிரோட்டத்தையும் இழந்து, நதியே நஞ்சாக மாறி நிற்கும் நிலை பெருங்கவலையைத் தருகிறது. தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சட்டவிரோதமாகத் திறந்துவிடப்படும் ரசாயன கழிவுநீர் பாலாற்றில் கலக்கும் காட்சிகள் ஊடகங்களின் வாயிலாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது ஆட்சியாளர்களின் அலட்சியத்தையும் அக்கறையின்மையையும் தான் காட்டுகிறது.

ஆகவே, இச்சிக்கலில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி, தொழிற்சாலைக்கழிவுகளைப் பாலாற்றில் கலக்கும் தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நிரந்தரமாகத் தடைவிதிக்க வேண்டுமெனவும், இராணிப்பேட்டை பகுதி மண்ணுக்கும், மக்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய நாசகாரத்தொழிற்சாலைகளைக் கண்டறிந்து அவற்றை உடனடியாக மூட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என கோரிக்கை விடுத்துள்ளார்.