இராஜபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சனிக்கிழமை இரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது; அரசியல் என்பது மக்களுக்கான முழுக்க, முழுக்க சேவை என்கிறார் நமது தாத்தா காமராஜர். ஆனால் இங்கே அரசியல் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாறி இருக்கிறது. மக்கள் சேவை இல்லாமல் ஒரு வேட்பாளரின் தேவையை கணக்கில் கொண்டு முதலீடு செய்யப்படுகிறது. காமராஜர் தேர்தலில் தோற்கவில்லை மக்களாகிய நீங்கள் தான் தோற்றுப் போனீர்கள்.திமுக, மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளிலும் ஊழல் உள்ளது. என்னை பொருத்தவரை இரண்டு கட்சிகளும் ஒன்று தான்.
அதே போல நான்கு தேர்தலிலும் தோல்வி கண்ட நான் தோற்கவில்லை. நீங்கள் தான் தோற்றுப் போனீர்கள்.234 தொகுதிகளிலும் தனியாக வேட்பாளர் நிறுத்திய நமது கட்சிதான் பெரிய கட்சி. கட்சி வளர்ந்து வருகிறது. நான் அதிகாரத்திற்கு வந்தால் முதலில் இலவசங்களை ஒழிப்பேன், வீட்டுக்கு ஒரு அரசு வேலை தருவேன்,மாடு வளர்ப்போம், ஆடு வளர்ப்போம், பன்றி வளர்ப்போம், கழுதை வளர்ப்போம், பொருளாதாரத்தை பெருக்குவோம்.

ஓட்டுக்கு காசு கொடுப்பவன் பாவி, அதை வாங்குபவன் தேச துரோகி என்றார் பசும்பொன் தேவர்.எனவே படித்த மருத்துவர் கார்த்திகேயனுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும், இந்தப் பகுதியில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தருவார் என கூறினார்.




