மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டி ஊராட்சிகுட்பட்ட குமரன்கோவிலில் அமைந்துள்ளது சீலைக்காரியம்மன் கோவில். இக்கோவில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்டு சீலைக்காரியம்மன் பீட கல் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி முன்னதாக கணபதி ஹோமம், கோமாதா பூஜை, முதல் கால யாகசாலை பூஜைகள், வாஸ்து சாந்தி, மூல மந்திர ஜெயம் மற்றும் இரண்டாம் காலயாக சாலை பூஜைகள், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள், நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து கடம்புறப்பாடு நடைபெற்றது. பின்னர் மங்கள இசை முழங்க சிவாச்சாரியார் ராம்குமார் தலைமையிலான அர்ச்சகர்கள் கோவிலில் உள்ள பீட கல்லிற்கு புனித நீர் ஊற்றினர். அதனைதொடர்ந்து புதிய கோவிலில் கரும்பு பந்தல் அமைக்கப்பட்ட பீடக்கல்லில் நாகர் சிலை வைக்கப்பட்டு அலங்காரத்தில் சீலைக்காரியம்மன் காட்சியளித்தார். இதில் திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி குழுவினர் செய்தனர். மேலும் கோவில் கமிட்டி குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
