• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பாட புத்தகத்தில் ரம்மி குறித்த பாடப்பகுதி நீக்கப்படும்

6-ம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டு தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் சோகம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதை தடுக்கும் வகையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழக அரசு தடை செய்துள்ளது. இதற்கான தடைச் சட்டம் கொண்டு வந்து கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள 6ம் வகுப்பு, மூன்றாவது பருவ கணித பாட புத்தகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை எப்படி விளையாடுவது என்பது குறித்த பாடப்பகுதி இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறையே ரம்மி விளையாட்டை கற்றுத் தரும் வகையில் முகவுரை, விளக்கவுரையுடன் இந்த பாடப்பகுதி தரப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரம்மி குறித்த பாடத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதன் காரணமாக இந்த பாடப்பகுதியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கல்வியாண்டில் தான் இந்த பாடப்பகுதி இடம் பெற்று இருப்பதாகவும் அடுத்த கல்வியாண்டு முதல் ரம்மி விளையாட்டு குறித்த பாடப்பகுதி முழுவதுமாக நீக்கப்படும் என்றும் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.