தமிழகத்தில் சிகரெட் மற்றும் சிரின்ஜ் வடிவ மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு குழந்தைகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.
அதேவேளையில் ‘சிகரெட் வடிவ மிட்டாய்களை ஸ்டைலாக ருசிக்கும் குழந்தைகளுக்கு புகைப்பிடிக்கும் எண்ணம் வரலாம்’ என்று மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.
எனவே சிகரெட் மற்றும் சிரின்ஜ் வகை மிட்டாய்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் சிகரெட் மிட்டாய்கள் விற்பனையில் உள்ளது.. எனவே தமிழகம் முழுவதிலும் சம்பந்தப்பட்ட கடை மற்றும் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் ஒரு பகுதியாக மதுரை உணவு பாதுகாப்பு துறையை சேர்ந்த சந்திரமோகன் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மாவட்டம் முழுவதிலும் அதிரடி சோதனை நடத்தினார். அதில் 150-க்கும் மேற்பட்ட கடைகளில் மிட்டாய் சாம்பிள்கள் எடுக்கப்பட்டன. இதில் மதுரையில் பல்வேறு கடைகளில் சிகரெட் மிட்டாய்கள் விற்பனையில் இருப்பது தெரியவந்தது. எனவே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது செல்லூர், ஜெய்ஹிந்துபுரம் ஆகிய பகுதிகளில் சிகரெட் மிட்டாய்கள் தயாராகி விற்பனைக்கு வருவது தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தியதில் அங்கு உள்ள 2 ஆலைகளில் சிகரெட் மிட்டாய்கள் தயாரிக்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் மேற்கண்ட 2 மிட்டாய் நிறுவனங்களுக்கும் அதிரடியாக சீல் வைத்தனர்.
மதுரையில் சிகரெட் வடிவ மிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வந்த 2 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நிறுவனங்கள் அதிரடியாக சீல் வைத்த சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.