மதுரையில் அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் தெரிவிக்கையில், தற்போது பருவ கால மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது, இந்த காய்ச்சலால் உடல் சோர்வு ,தலைவலி, வாந்தி, உடல் வலி ஆகியவை ஏற்படுகிறது. குறிப்பாக மாணவர்கள் அதிகமாக பாதிப்பு அடைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஸ்டாலின் திமுக அரசோ தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், புதுப்புது பெயர்களை கண்டுபிடித்து அதில் விளம்பரத்தை தான் தேடுகிறார்கள். தற்போது கூட நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தை விளம்பரப்படுத்தி அதில் 1,256 முகாம்களை நடத்துவோம் என்று கூறுகிறார்கள். இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. ஏற்கனவே மக்களை தேடி மருத்துவம் திட்டமும் மக்களிடத்தில் தோல்வி அடைந்து விட்டது.
தற்போது தமிழகத்தில் 58,897 பள்ளிகள் உள்ளது இதில் 24,310 அரசு தொடக்கப் பள்ளிகளும், 7024 அரசு நடுநிலைப் பள்ளிகளும்,3135 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 3110 அரசு மேல்நிலைப் பள்ளிகளும், உள்ளது. 8,328 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளது.இது தவிர 12,382 தனியார் பள்ளிகள் உள்ளது.
தற்போது காலாண்டு தேர்வு விரைவில் வரவுள்ளது மாணவர்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகிறார்கள்.ஆகவே மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு ,இனியும் கும்பகர்ணனை போல ஸ்டாலின் அரசு குறட்டை விடாமல், போர்க்கால அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 58,897 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் மருத்துவ முகாம் நடத்தி தேவையான விழிப்புணர்வை வழங்க வேண்டும் என கூறினார்.