• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சாம்சங் நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேற வாய்ப்பு

Byவிஷா

Oct 9, 2024

சாம்சங் நிறுவன ஊழியர்கள் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், சாம்சங் நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து, போராட்டமும் இன்றுடன் ஒரு மாதத்தை எட்டியிருக்கிறது.
குறிப்பாக ஊதியத்தை உயர்த்தி வழங்கிட, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்திட, 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தைக் குறைத்தல் என்பது உள்ளிட்ட நியாயமான பல கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 90 சதவிகித சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. ஆனாலும் தொடர்ந்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். ஏற்கனவே நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அமைச்சர்கள் டிஆர்பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணசேன் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
இதில் 14 அம்ச கோரிக்கைகளுடன் உடன்பாடு ஏற்பட்டு ஒரு தரப்பு தொழிலாளர்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அரசின் கோரிக்கைளை ஏற்று தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என அமைச்சர் தா.மோ. அன்பரன் கேட்டுக்கொண்டார். ஆனால் சிஐடியு தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும், போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.
சிஐடியுவை பதிவு செய்வதை தவிர மற்ற அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டதாக சாம்சங் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. மேலும் சிஐடியு பதிவு விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் தமிழக அரசு இதில் தலையிட வேண்டாம் எனவும் சாம்சங் நிறுவனம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சாம்சங் நிறுவனம் சி.ஐ.டி.யூ பிரச்சனையின் காரணமாக தமிழகத்தை விட்டு வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2000 ஊழியர்களைக் கொண்ட சாம்சங் நிறுவனம் நொய்டாவுக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் உத்தரபிரதேச அரசும், ஆந்திர அரசும் சாம்சங் நிறுவனத்தை தங்கள் மாநிலத்திற்கு இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் குஜராத்தும் சாம்சங் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.