தமிழகத்தில் 4,000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.4,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்யவுள்ளதாக நேற்று அறிவித்துள்ளது. இந்த ஏலம் வரும் ஜூன் 10-ஆம் தேதி மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் கோட்டை அலுவலகத்தில் நடத்தப்படும் என்று நிதித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில், 3 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூ.1,000 கோடி மதிப்பிலும், 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூ.2,000 கோடி மதிப்பிலும் விற்பனை செய்யப்படவுள்ளன. அத்துடன், ஏற்கனவே வெளியிடப்பட்ட 6.94 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் (2055) ரூ.1,000 கோடி மதிப்பிற்கு மறுவெளியீடு செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை கோட்டை அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தின் விதிமுறைகள் குறித்து நிதித்துறை முதன்மை செயலாளர் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார். அதன்படி, போட்டி ஏலக்கேட்புகள் ஜூன் 10, 2025 அன்று முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணி வரை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேபோல், போட்டியற்ற ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணி வரை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த ஏலக்கேட்புகள் அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறை மூலம் மின்னணு படிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிணையப் பத்திரங்கள் ஏலம் மூலம் திரட்டப்படும் நிதி, தமிழக அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும், நிதித் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிணையப்பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை
