குணசேகர் இயக்கத்தில், மணிசர்மா இசையமைப்பில்,
சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவ்மோகன், கவுதமி, அதிதி பாலன், மதுபாலா, பிரகாஷ் ராஜ்
மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சாகுந்தலம்’. தெலுங்கில் உருவாகியுள்ள இப்படத்தை பன்மொழி படமாக தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஏப்ரல் 14 அன்று வெளியிடுகிறார்கள்.
பொதுவாக பன்மொழி வெளியீடாக வரும் படங்களுக்கு அந்தந்த மொழி பேசும் மாநில தலைநகரங்களில், அல்லது முக்கிய நகரங்களில் படத்தை விளம்பரபடுத்தும் வகையில் நிகழ்ச்சிகள், அதனையொட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்புக்களை தயாரிப்பு நிறுவனம் நடத்துவது வாடிக்கை.
ஆனால் இன்னும் சில நாட்களில் திரைக்கு வர உள்ள ‘சாகுந்தலம்’ படத்திற்கு தமிழ் பதிப்புக்காக இதுவரை தமிழ்நாட்டில் எந்த ஒரு நிகழ்வையும் நடத்தவில்லை.
சமந்தாவின் வீடியோபேட்டி ஒன்றை மட்டும் ஊடகங்களுக்கு அனுப்பிவிட்டு அத்துடன் தமிழ் பதிப்புக்கான தங்களுடைய புரமோஷனை முடித்துக் கொண்டது படக்குழு. இதுபோலவே நானி – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘தசரா’ படத்தின் தமிழ் பதிப்பிற்கு கீர்த்தி சுரேஷ் வீடியோ போட்டி ஒன்றை ஊடகங்களுக்கு படத்தின் பத்திரிகை தொடர்பாளர் மூலம் அனுப்பிவைத்தார்கள். தெலுங்கில் பெரும்வெற்றிபெற்ற தசரா தமிழில் வந்த சுவடே தெரியாமல் போனது. தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்டு தமிழ் பதிப்பில் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்திய பாகுபலி,ஆர் ஆர்ஆர், கன்னட
கேஜி எஃப் போன்ற படங்களுக்கு தமிழகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புகள், புரமோஷன் நிகழ்ச்சிகள் தசரா, சாகுந்தலம் படங்களின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தெரியாதா அல்லது அப்படத்தின் பத்திரிகை தொடர்பாளர்கள் கூறவில்லையா என்கிற கேள்விகள் எழுப்பபட்டு வருகிறது.