• Sun. May 12th, 2024

மகரவிளக்கு பூஜைக்கு தயாராகும் சபரிமலை: துரிதமாக நடைபெறும் தூய்மை பணிகள்

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில், தூய்மைப்படுத்தும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 16-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதியோடு, ஐயப்ப பக்தர்களின் 41 நாள் விரத காலம் முடிந்து மண்டல பூஜை நிறைவு பெற்றது. இதையடுத்து சபரிமலையில் டிசம்பர் 26-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இதையடுத்து டிசம்பர் 30-ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. டிசம்பர் 31-ஆம் தேதி முதல் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர். அடுத்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். ஜனவரி 19-ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மண்டல பூஜைக்கு 11 லட்சம் பக்தர்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்து சென்றதால், சபரி மலையில் சுகாதாரத்தை காக்கும் பொருட்டு ஐயப்பன் கோயிலை தூய்மைப்படுத்தும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றது.

சபரிமலை சன்னிதானம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீயணைப்புத் துறை வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு, கழுவி சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஐயப்ப பக்தர்கள் கொண்டுவந்த கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டு மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையை தயார்படுத்தும் படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *