• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஊரகப் பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி…

Byகாயத்ரி

Feb 12, 2022

தோ்தல் நடத்தை விதிகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக செயல்படுத்தும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “நகைக் கடன் தள்ளுபடியில் தகுதி வாய்ந்த மற்றும் தகுதி பெறாதவற்களுக்கான நிபந்தனைகள் மற்றும் அறிவுரைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றியே தகுதி வாய்ந்த பயனாளிகளின் பட்டியலைத் தயார் செய்ய வேண்டும்.தகுதி பெறாத நபர்கள் மிகவும் கவனமுடன் பரிசீலித்து நீக்கிய பிறகே பட்டியலைத் தயார் செய்ய வேண்டும். எந்த ஒரு தகுதி பெறாத கடன்தாரருக்கும் நகைக் கடன் தள்ளுபடி தவறுதலாக வழங்கப்பட்டு விடக் கூடாது.

அவ்வாறு தவறுதலாக வழங்கப்படும் பட்சத்தில் அதற்கு சம்பந்தப்பட்ட சங்கங்களின் செயலாளர், வங்கி மேலாளர்கள் மற்றும் பட்டியலைத் தயார் செய்யும் குழுவே முழு பொறுப்பாவார்.இதனை துணைப் பதிவாளர் மற்றும் மண்டல இணைப் பதிவாளர் ஆகியோர் முறையாக கண்காணிக்க வேண்டும். நகைக் கடன் தள்ளுபடி அரசாணையில் குறிப்பிடப்பட்ட தகுதி வாய்ந்த பயனாளிக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகளை தோ்வு செய்து, அவா்கள் அடமானம் வைத்த நகை மற்றும் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்க வேண்டும். இப்போது நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று வருகிறது. எனவே, தோ்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வழங்க வேண்டும்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் அவற்றை கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும். நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படும் வரை நகைக் கடன் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது.தோ்தல் நடத்தை விதிகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் தள்ளுபடித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். மேலும், பயனாளிகளுக்கான நகைகளையும், தள்ளுபடி சான்றிதழ்களையும் உடனடியாக வழங்கிட வேண்டும்.பொது நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் வழங்கும் பட்சத்தில், அவா்கள் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுபவராக இருக்கக் கூடாது.மேலும், தள்ளுபடி நகைகளுக்கான சான்றிதழ் மற்றும் நகைகளை திரும்ப வழங்கும் பணியில் தோ்தல் பணி அலுவலா்களை ஈடுபடுத்தக் கூடாது.

தோ்தல் நடத்தை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி பொது நகைக் கடன் தள்ளுபடித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.