• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரூ. 5க்கு மின்சாரம் வாங்கி நஷ்டத்தை சந்தித்த டான்ஜெட்கோ

டான்ஜெட்கோ நிறுவனம் மிக அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியதால், ரூ. 149 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை அலுவலகம் விமர்சித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிதி செயல்பாடுகள் குறித்த ஆய்வறிக்கை தமிழக சட்டப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிஏஜி எனப்படும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தயாரித்த இந்த அறிக்கையில் டான்ஜெட்கோ கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை ஒரு யூனிட் மின்சாரத்தை டான்ஜெட்கோவுக்கு 4 ரூபாய் 99 காசுகள் என்ற விலையில் அதானி நிறுவனம் விற்றதாக சிஏஜி கூறியுள்ளது.

இதைத் தொடர்ந்து மேலும் 2 ஆண்டுகளுக்கு 3 ரூபாய் 50 காசுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை விற்க அதானி நிறுவனம் முன்வந்த நிலையில் டான்ஜெட்கோ அதை மறுத்துவிட்டதாகவும் சிஏஜி அறிக்கை கூறுகிறது. மூன்றரை ரூபாய்க்கு கிடைத்த மின்சாரத்தை புறக்கணித்துவிட்டு 4 ரூபாய் 10 காசுகள் முதல் 5 ரூபாய் 48 காசுகள் வரை வேறு இடத்தில் அதிக விலை கொடுத்து டான்ஜெட்கோ வாங்கியதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கியதால் டான்ஜெட்கோவுக்கு 149 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தணிக்கையில் தெரியவந்துள்ளது.

மின்சாரத்தை வாங்க டான்ஜெட்கோ சில நிறுவனங்களுடன் ஏற்கனவே நீண்ட கால ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. இந்நிலையில், அதை கைவிட்டுவிட்டு வேறு நிறுவனங்களுடன் குறுகிய கால ஒப்பந்தம் செய்து கொண்டு அதிக தொகைக்கு மின்சாரத்தை வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.