மதுரை மாடக்குளம் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார்(45). இவரது நிலம் விளாச்சேரி பகுதியில் அமைந்துள்ளது. அதன் மின் இணைப்பை இடம் மாற்றம் செய்து தருவதற்காக மின்வாரிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தார். அங்கு இளநிலை பொறியாளராக உள்ள திருப்பதி இந்த பணிக்காக ரூ.10 ஆயிரம் பணம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக சரவணகுமார் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை அவரிடம் கொடுத்துள்ளனர். அதனைப் பெற்றுக்கொண்ட சரவணகுமார் இன்று மாலை மின்வாரிய இளநிலை பொறியாளர் திருப்பதியிடம் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய நிலையில் ஏடிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் ஆய்வாளர்கள் சூரியகலா, ரமேஷ், குமரகுரு உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து திருப்பதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.





