சென்னை புறநகரில், 40க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி படப்பை குணா இன்று திடீரென சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் படப்பை குணா என்கிற குணசேகரன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அத்துடன் இவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. படப்பை குணாவை போலீசார் கைது செய்ய முடிவெடுத்தனர். இதை அறிந்த படப்பை குணா தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர். படப்பை குணாவை என்கவுன்டர் செய்யும் முடிவில் போலீசார் இருப்பதாக கூறப்பட்டது.
குணா தலைமறைவாக இருப்பதால் அவரது மனைவி எல்லம்மாளை கடந்த 9-ம் தேதி அதிகாலை கூடுதல் எஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படையினர் பிடித்து விசாரித்தனர்.படப்பை குணா தவறு செய்ய, தலைமறைவாக ஒரு சில போலீசாரே உடந்தையாக இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் படப்பை குணாவிற்கு உதவியதாக 3 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவிட்டார்.மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள், வழக்குகளில் சரணடைய எனது கணவர் தயாராக உள்ளார். புறநகர் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரியால் என்கவுன்டர் செய்யப்படலாம் என்கிற அச்சம் இருக்கிறது என்று கூறினார்.
இதனை போலீசார் மறுத்தனர். ரவுடி குணாவை என்கவுன்டர் செய்யும் திட்டம் இல்லை, சட்டப்படியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படும் என்றனர். இதனால் எல்லம்மாள் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ரவுடி படப்பை குணா இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்தார்.