

டி20 உலககோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மேகமூட்டத்துடன் அடிலெய்ட் காணப்படுவதால், ஆடுகளம் முதலில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது.
இதனால் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மாவும், கேஎல் ராகுலும் வங்கதேச பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறினர்.
டஸ்கின் அகமது பந்தவீச்சை எதிர்கொண்ட ராகுலால் முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. சோரிஃபுல் இஸ்லாம் வீசிய 2வது ஓவரில் ராகுல் ஒரு சிக்சரை விளாசினார். இதனையடுத்து டஸ்கின் அகமது வீசிய அவரது 2வது ஓவரில் ரன் அடிக்க முயன்ற ரோகித் சர்மா, ஆஃப் சைடு சென்ற பந்தை Deep Backward square leg திசையை நோக்கி சிக்சர் அடிக்க முயன்றார்.
அப்போது அந்த கேட்ச் வாய்ப்பை ஹசன் மகமுத் பிடிக்காமல் கோட்டைவிட்டார். இதனால் தனக்கு கிடைத்த லைஃப்பை ரோகித் சிறப்பாக பயன்படுத்த போகிறார் என எதிர்பார்த்த நிலையில், ரோகித் சர்மா அடுத்த ஓவரிலேயே கேட்ச் மிஸ் செய்த ஹசன் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். ரோகித் நெதர்லாந்துக்கு எதிராக மட்டும் அரைசதம் விளாசினார்.
ஆனால் மற்ற ஆட்டத்தில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதே போன்று 2011ஆம் ஆண்டு உலககோப்பையில் தோனி மற்ற ஆட்டங்களில் சொதப்பி வந்தாலும், இறுதிப் போட்டியில் அணியை காப்பாற்றினார். இதனால் ரோகித் பைனல் வரை அடிக்க மாட்டார் போல என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இதனிடையே கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி சிக்சர், பவுண்டரிகளை அடிக்க தொடங்கினார். 9வது ஓவரில் மட்டும் இந்திய அணி 24 ரன்களை விளாசியது. இதன் மூலம் கேஎல் ராகுல் 31 பந்தில் அரைசதம் கடந்தார். இதில் 4 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். எனினும் அடுத்த பந்திலேயே ராகுல் ஆட்டமிழந்தார்.
