உசிலம்பட்டி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால், நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுறும் நிலை உருவானது.
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தொட்டப்பநாயக்கணூர், செட்டியபட்டி, வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி, அல்லிகுண்டம், வாலாந்தூர், செல்லம்பட்டி, உத்தப்பநாயக்கணூர், வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த கனமழை காரணமாக வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி மற்றும் சடையாண்டிபட்டி பகுதிகளில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகள் உடைந்து ஊருக்குள் மழைநீர் புகுந்தது., இதே போல் கொங்கபட்டி பகுதியில் உசிலம்பட்டி நகர் பகுதியிலிருந்து வரும் மழைநீரும், சாக்கடை கழிவு நீரும் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதியில் தேங்கி வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது., இதே போல் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு நீராவி மேட்டுத் தெரு பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து காணப்படுகிறது.
இதனால் வீடுகளில் உள்ள பொருட்களை பாதுகாக்க முடியாமலும், வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்த்தாலும் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.

தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில் பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.