மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சங்கையா சாமி ஊர் காவலன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாகி உள்ள நிலையில் விரைவில் பணிகளை தொடங்கி கும்பாபிஷேகத்தை நடத்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

முள்ளிபள்ளம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு சங்கையா ஊர்காவலன் திருக்கோவில் உள்ளது இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதாக கிராம பொதுமக்கள் கூறுகின்றனர். அதாவது இந்த கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை யாருமே பார்த்ததில்லை என கூறும் அளவிற்கு கும்பாபிஷேகம் நடைபெற்று வெகு காலம் ஆகிவிட்டதாக கூறும்நிலையில் கடந்த ஆண்டு கிராம பொதுமக்கள் கூட்டம் போட்டு கும்பாபிஷேக பணிகளை தொடங்கி விரைவில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்திருந்தனர்.

அதனைதொடர்ந்து கோவிலை பார்வையிட்ட அப்போதைய வருவாய் கோட்டாட்சியர் கோவில் கும்பாபிஷேக பணிகளுக்கு கோவிலில் உள்ள பெரிய மரம் இடையூறாக இருப்பதாகவும் மரத்தை அகற்றிய பின்பு கும்பாபிஷேக பணிகளை தொடங்குவதாகவும் கிராம மக்களிடம் கூறிச் சென்றார். ஆனால் வருவாய் கோட்டாட்சியர் பார்வையிட்டு ஆறு மாதங்கள் ஆகியும் இதுவரை அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் அரசு தரப்பில் இருந்து எடுக்கவில்லை. ஆகையால் விரைவில் கும்பாபிஷேக பணிகளை தொடங்கி கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.