புதுக்கோட்டை என்ற பெயர் வருவதற்கு முன்பாக கலசமங்கலம் என்று தான் பெயர் இருந்திருக்கிறது. அது குறித்து புதுக்கோட்டை வரலாறு மற்றும் கோயில்கள் வரலாறுகளில் நிறைய சான்றுகள் உள்ளன.

அது புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியில் தான் இருந்திருக்கிறது. அந்தப் பகுதி இப்போது வனப்பகுதியாக இருக்கிறது. அந்த பகுதியில் தான் புதுக்கோட்டை மன்னர்கள் காலத்தில் கலசமங்கலம் முனீஸ்வரர் கோயில் மடப்பள்ளி உட்பட ஆகம விதிகளின்படி கட்டப்பட்டு வணங்கி வந்திருக்கிறார்கள். மன்னர்கள் காலத்திற்குப் பிறகு குறிப்பாக 1960 களுக்கு பிறகு இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலாக மாறி இருக்கிறது. என்ற போதிலும் இந்த கோவிலுக்கு பூசகராக ரெங்கசாமி பூசாரி என்பவரும் அவருக்குப் பின் அவரது மகன் வெள்ளைச்சாமி பூசாரி என்பவரும் அதன்பிறகு வீரப்பன் பூசாரி என்பவரும் இருந்து வந்திருக்கிறார்கள்.

மன்னர்கள் காலத்திலும் சரி அதற்கு பிறகு வந்த இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பிறகும் கால பூஜைகளுக்கு முறையான நிதி ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த நிதியைக் கொண்டு இந்த பூசாரியின் குடும்பத்தினர் தொடர்ந்து பூஜைகள் செய்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு மாத ஊதியமும் வழங்கி இருக்கிறது இப்போது வரை வழங்கி வருகிறது. 2010 ஆம் ஆண்டு வரை வீரப்பன் பூசாரி பணியாற்றி வந்த பிறகு அவரது வாரிசான ரவிச்சந்திரன் என்பவரும் அவருக்கு சற்று உடல்நிலை குறைவு ஏற்படுகிற நேரத்தில் அவரது தம்பி குமார் என்பவரும் முறையான பூஜை முறைகளை செய்து வருகிறார்கள்.

கலசமங்கலம் என்பது புதுக்கோட்டை உருவாகுவதற்கு முன்பிருந்த ஊராக இருந்த போதிலும் அதை மையப்படுத்தி தான் மன்னர்கள் ஆட்சியும் நடைபெற்று வந்திருக்கிறது ஆனாலும் தற்போது இந்த பகுதிகள் குறிப்பாக திருக்கட்டளைக்கு வடக்கில் உள்ள பெரும்பாலான பகுதி வனப்பகுதியாக இருக்கிறது. மற்ற இடங்களில் உள்ள காப்புக் காடுகளை மாற்றி தைல மரக் காடுகள் உருவானது போல இந்தப் பகுதியும் தைல மரக்காடாக இருக்கிறது. இந்த கோவிலுக்கு சிறிது தூரத்தில் தாமரைக் குளம் ஒன்று இருந்திருக்கிறது. இப்போதும் குளம் இருந்தா போதிலும் தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு வருவதற்கு சாலை வசதி தெரு விளக்கு வசதி இல்லாமல் இருக்கிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்களும் கிராம மக்களும் கூறுகையில் இந்த பகுதி வனப்பகுதியாக மாறியதால் தான் யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். இங்க இருக்கும் முனீஸ்வரர் சக்தி வாய்ந்த தெய்வமாகும். முனீஸ்வரர் என்றாலும் இந்த கோவிலுக்கு ஆடு கோழிகள் போன்ற பலியிடும் வழக்கம் இல்லை. பொங்கல் மட்டும் வைத்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் வருவதோடு இருக்கிறது. எனவே இந்த கோவிலுக்கு சாலை வசதியும் தெருவிளக்கு வசதியும் தண்ணீர் வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும் அதற்கு முன் வர வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நான்காயிரத்துக்கும் அதிகமான இந்துமதக் கோயில்களுக்கு கோயில்களை புனரமைப்பு செய்து திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழாக்களை நடத்தி இருப்பதாக இப்போதுள்ள ஆளும் கட்சி தமிழ்நாடு முழுவதும் தங்களது பெருமையை பறைசாற்றி வரும் நிலையில் வரலாற்றுப் பெருமை வாய்ந்த இந்தக் கோவிலுக்கும் உரிய வசதிகளை செய்து கொடுத்தால் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கையோடு தெரிவித்திருக்கிறார்கள்.







