மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் குடியரசு தினவிழாவில் ஆளுனர் ஆர்.என்.ரவி தேசியகொடியை ஏற்றுகிறார் . மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறார்.
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கின்றன. எனவே இந்த ஆண்டு குடியரசு தின விழா, மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு வரும் இந்த ஆண்டு குடியரசு தினத்தை வெகுவிமரிசையாக முழு அளவில் கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு ஏற்றபடி உழைப்பாளர் சிலை பகுதியில் பிரமாண்டமான அளவில் பந்தல்கள் போடப்பட்டு வருகின்றன. அங்கு சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, நீதிபதிகள், வெளிநாட்டு தூதர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் அமருவார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பார். அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு தேசிய கொடியைஆளுநர்ஆர்.என்.ரவி ஏற்றி வைக்கிறார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவும். தேசிய கீதம் இசைக்கப்படும். பின்னர் பல்வேறு படை அணியினர் மிடுக்குடன் வந்து வணக்கம் செலுத்துவார்கள். அதை ஆளுநர் ஏற்றுக்கொள்வார். அன்று மாலை 4.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் அனைவரையும்ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் வரவேற்பார்கள். அனைவருக்கும் அங்கு தேநீர் விருந்து அளிக்கப்படும். அப்போது, சிறந்த சமூக சேவைக்கான விருது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது ஆகியவற்றை உரியவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்குவார்.
குடியரசு தின விழா- ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றுகிறார்
