கோயமுத்தூர் கட்டுநர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் (சிபாகா) சார்பில் “மரம் காப்போம் – மண் காப்போம்” என்ற நோக்கில், சுமார் 30 ஆண்டுகள் பழமையான 3 பெரிய மரங்கள் இடமாற்றம் செய்து மறு நடவு செய்யும் நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள டாக்டர் ஜி.ஆர்.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்
நடைபெற்றது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள ஸ்ரீனிவாசன் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி. ஸ்ரீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆலமர குடும்பத்தைச் சார்ந்த 1 மரம் மற்றும் 2 வேப்பமரங்கள் பாதுகாப்பாக அகற்றி, புதிய இடத்திற்கு மாற்றி நடவு செய்யப்பட்டது. மர வேர்களுக்கு சேதம் ஏற்படாமல் கயிறுகள் கட்டி நிபுணத்துவ முறையில் கவனமாக நகர்த்தப்பட்டன. ஒவ்வொரு மரத்தையும் மறு நடவு செய்ய சுமார் 40 முதல் 50 நிமிடங்கள் வரை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மர வேர்களில் உள்ள நுண்ணுயிர்கள் பாதுகாக்க 3 முதல் 4 மணி நேரத்திற்குள் நடவு பணிகள் முடிக்கப்பட்டன.
மரங்கள் செழித்து வளர ‘ஜீவாமிர்தம்’ எனப்படும் இயற்கை உரக்கலவை பயன்படுத்தப்பட்டது. இதில் பசு சாணம், கோ-மூத்திரம், நாட்டுச் சர்க்கரை, வெல்லம் மற்றும் வரப்பு மண் சேர்த்து, ஒரு வாரத்திற்கு முன்பே தயார் செய்து வைத்திருந்தனர். நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் ரம்யா ஆர். செந்தில் தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் ஏ. சம்சுதீன் முன்னிலை வகித்தார். சோசியல் பேனல் தலைவர் ஆர். செல்வராஜ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சிறப்பு விருந்தினராக ராயல் கேர் மருத்துவமனை நிறுவனர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே. மாதேஸ்வரன் கலந்துகொண்டு மரங்களை மறு நடவு செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

ஜி.ஆர்.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் கே.கே. ராமச்சந்திரன், ஸ்ரீனிவாசன் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஜி. ஸ்ரீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வள்ளுவன் செய்தார்.
விழாவில் ஜிஆர்டி கல்வி குழுமத்தின் தாளாளர் கீதா பத்மநாபன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.










