• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

உக்கடம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் அராஜகம்..,

BySeenu

Feb 9, 2026

தமிழகத்தின் தென்னிந்திய மான்செஸ்டர் எனப் போற்றப்படும் கோவையில், ஆட்டோ ஓட்டுநர்களின் அராஜகம் இப்போது எல்லை மீறிச் சென்று கொண்டு இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நகரின் மிக முக்கியமான மற்றும் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த உக்கடம் பேருந்து நிலையத்தில், இன்று காலை முதிய தம்பதி ஒருவரை ஆட்டோ ஓட்டுநர்கள் ஈவு இரக்கமின்றித் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பேருந்து நிலையம் வந்த அந்த முதிய தம்பதி, ஓரிடத்திற்குச் செல்வதற்காக ஆட்டோ ஓட்டுநர்களிடம் வாடகை குறித்துப் பேசி உள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் மனிதநேயமே இல்லாமல் அந்த வயதான இருவரையும் ஆட்டோவில் இருந்து கீழே தள்ளி விட்டு, நடுரோட்டில் வைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த அநாகரீகச் செயலை அங்கு இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்த போது, ஆட்டோ ஓட்டுநர்கள் அவரையும் மிரட்டியதால் பயந்துபோய் வீடியோ எடுப்பதை பாதியிலேயே நிறுத்தி உள்ளார்.

​சமீப காலமாகவே கோவையில் சில ஆட்டோ ஓட்டுநர்கள் ஒருபுறம் பயணிகளைக் கடத்திப் பணம் பறிக்கும் கும்பல், மறுபுறம் வாடகை ஒத்துவரவில்லை என்றால் பயணிகளைத் தரக்குறைவாகப் பேசித் தாக்கும் ஓட்டுநர்கள் என ஆட்டோ ஓட்டுநர்களின் அராஜகம் ஒரு தொடர்கதையாகி வருகிறது. இன்று நடந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்கள் வயதானவர்கள் என்று கூடப் பார்க்காமல் ஆட்டோ ஓட்டுநர்கள் காட்டிய அந்த வெறித்தனம், நேரில் பார்த்தவர்களை நிலைகுலைய வைத்து உள்ளது.

“பெற்றோர் வயதில் இருப்பவர்களை இப்படித் தெருவில் போட்டு அடிப்பதா?” என அங்கு இருந்த மக்கள் ஆவேசப்பட்டாலும், ஆட்டோ கும்பலின் மிரட்டலுக்குப் பயந்து பலரும் மௌனம் காத்தனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

​உக்கடம் பேருந்து நிலையத்திற்கு மிக அருகிலேயே காவல் நிலையம் இருந்தும், மக்கள் அதிகம் கூடும் இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் போலீஸார் இல்லாததே இதுபோன்ற குற்றவாளிகளுக்குத் துணிச்சலைத் தருவதாகப் பொதுமக்கள் சாடுகின்றனர்.