• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

வட்டாரப் போக்குவரத்துத் துறை இணைந்து அதிரடி சோதனை..,

ByKalamegam Viswanathan

Nov 26, 2026

மதுரை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களைத் (Air Horns) தடுக்கவும் மாநகர காவல்துறை பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில், போக்குவரத்து காவல் துணை ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கரிமேடு போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் இன்று போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் இணைந்து கூட்டு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த அதிரடிச் சோதனையின்போது, அப்பகுதி வழியாகச் சென்ற 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் (Air Horns) பொருத்தியிருந்த 50-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் கண்டறியப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அந்தப் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் குழாய்கள் உடனடியாகக் கழற்றி அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களைப் பொருத்தக் கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஓட்டுநர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தக் கூட்டு வாகனத் தணிக்கையில் மதுரை வடக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், கரிமேடு போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் சந்தனகுமார், எஸ்.எஸ். காலனி போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் ஆண்டவர் மற்றும் 3 பயிற்சி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சோதனையை மேற்கொண்டனர்.