இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று முதல் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய் வரை குறைக்கப்படுகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் 1118 ரூபாய்க்கு விற்பனையான வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை 200 ரூபாய் குறைந்து 918 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் யாரும் கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் என்றும் அதே சமயம் நேற்று சிலிண்டர் கோரி புக் செய்தவர்களுக்கு விலையில் மாற்றம் இருக்காது அவர்களுக்கு 1118 என்ற விலையில் தான் சிலிண்டர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவிக்கையில், “டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரக்ஷா பந்தன், ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பரிசாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படும். சசோதரிகளுக்கு பிரதமர் மோடி வழங்கும் பரிசுதான் இந்த சிலிண்டர் விலை குறைப்பு.
ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த விலை குறைப்பையும் சேர்த்து 400 ரூபாயை குறைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது” என தெரிவித்தார். இந்த விலை குறைப்பு வர்த்தகரீதியில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்துபவர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு இன்று (30.09.2023) முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை குறைப்பின் மூலம் நாடு முழுவதும் 31 கோடி பயனாளர்கள் பயனடைவர் என மத்திய அரசு அறிவித்துள்ளது.