• Mon. Apr 29th, 2024

விநாயகர் சிலை அமைக்கும் பணி தீவிரம்..!

Byவிஷா

Aug 30, 2023

நாடு முழுவதும் செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஓமிப்போர், கிளப்பாக்கம், மற்றும் அய்யூர் அகரம், அய்யங்கோவில்பட்டு, சிந்தாமணி, வளவனூர், திருவாமாத்தூர், பனையபுரம், மடப்பட்டு உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சிங்கத்தின் மீது விநாயகர், சிவன், பார்வதியுடன் இருப்பது போன்ற விநாயகர், 3 தலையுடன் இருக்கும் விநாயகர், மயில் விநாயகர், அன்ன விநாயகர், மாட்டு வண்டிகளில் அமர்ந்தபடி செல்வது போன்ற விநாயகர், ஐந்துமுக சிங்க விநாயகர், நந்தி விநாயகர், மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்வது போன்ற விநாயகர், வலம்புரி விநாயகர், குபேந்திரருடன் இருக்கும் விநாயகர், 5 தலை நாகத்துடன் இருக்கும் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் 2 அடி முதல் 13 அடி உயரம் வரை விதவிதமான வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிலை தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலும், ரசாயன பொருட்களை கலக்காமலும், நீர் நிலைகளில் கரையும் தன்மையுள்ள சிலைகளை தயாரித்து வர்ணம் பூசி வருகிறோம். விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் சிலைகள் கேட்டு ஆர்டர் கொடுத்து வருகின்றனர் எனவும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை சற்று அதிகரிக்க கூடும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *