• Thu. Oct 10th, 2024

வருவாய்த்துறையில் 922 பேருக்கு பணிநியமனம்..!

Byவிஷா

May 16, 2023

தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நில அளவர்கள் மற்றும் வரைவாளர்கள் உள்ளிட்ட 922 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நேற்று (மே 15) கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நில அளவர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 698 நபர்களுக்கும், வரைவாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 224 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 15 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் இயங்கும் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட துறையில் காலியாக உள்ள நிலஅளவர் மற்றும் வரைவாளர் பணியிடங்களுக்கு உண்டான அடிப்படை கல்வித் தகுதியினை மாற்றியமைத்து, புதிய தொழில் நுட்ப கல்வித் தகுதியின் அடிப்படையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு, 698 நிலஅளவர்கள் மற்றும் 224 வரைவாளர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இந்தப் பணி நியமனம் மூலமாக பல்வேறு ஆண்டுகளாக பட்டா வழங்கப்படுவதில் இருந்து வந்த சிரமங்களை நீக்குவதற்கும், நிலம் மற்றும் நில அளவை சார்ந்த அனைத்து சேவைகளையும் உடனடியாக வழங்குவதற்கு உதவிகரமாக இருக்கும். முன்னதாக, தமிழ்நாடு நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வரைபடக் கண்காட்சியினை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்து, பார்வையிட்டார்.
இந்தக்கண்காட்சியில் பண்டைய சென்னை மாகாண வரைபடங்கள், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கு பிறகான சென்னை மாநில வரைபடங்கள், தற்போதைய தமிழ்நாடு மாநில வரைபடங்கள், மாவட்டங்களின் வரைபடங்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்ச்சியில், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *