• Sun. Nov 2nd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

அபூர்வ வகை குரங்குகள் பறிமுதல்..,

ByPrabhu Sekar

Jul 3, 2025

தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று அதிகாலை வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நிறுத்தி, சந்தேகப்பட்ட பயணிகளின் உடைமைகளை திறந்து பார்த்து சோதனை நடத்திக் கொண்டு இருந்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர், தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணியாக போய்விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் டிராலி டைப் பெரிய பை ஒன்று வைத்திருந்தார். அதில் சாக்லேட், பிஸ்கட் போன்ற உணவு பொருட்கள் மட்டுமே இருக்கிறது என்று கூறினார். ஆனாலும் சுங்க அதிகாரிகள் அந்த டிராலி பையை திறந்து பார்த்தபோது, அதனுள், மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளின் வனப்பகுதிகளில் வசிக்கும், அபூர்வ வகை, ஏகில் கிப்பான் கருங்குரங்கு ஒன்றும், ஈஸ்டர்ன் கிரே கிப்பான் குரங்கு ஒன்றும், ஆகிய 2 அபூர்வ வகை, குரங்குகள் உயிருடன் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதை அடுத்து அந்தப் பயணியிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இந்த அபூர்வ வகை குரங்குகளை, இங்கு வளர்ப்பதற்காக எடுத்து வந்ததாக கூறினார். ஆனால் அந்தக் குரங்குகளை, இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு, எந்த ஆவணங்களும் இல்லை. அதோடு அந்தக் குரங்குகளுக்கு நோய் கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? என்ற பரிசோதனை சான்று, நோய்க் கிருமிகள் பரவாமல் இருப்பதற்கான, தடுப்பு ஊசிகள் எதுவும் போடப்படவில்லை.

இதை அடுத்து இந்த குரங்குகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால், வெளிநாட்டு நோய் கிருமிகள், நமது நாட்டு விலங்குகள், பறவைகள் மற்றும் மனிதர்களுக்கும் பரவிவிடும் என்பதால், அந்த இரண்டு அபூர்வ வகை குரங்குகளையும், தாய்லாந்து நாட்டுக்கு, திருப்பி அனுப்ப முடிவு செய்தனர். அதன்படி நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு சென்ற தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், அந்தக் குரங்குகள் இரண்டும், திருப்பி அனுப்பப்பட்டன.

அதோடு குரங்குகளை சட்ட விரோதமாக வெளிநாட்டில் இருந்து, மறைத்து கடத்தி வந்த, சென்னை பயணியை, சுங்க அதிகாரிகள் கைது செய்து, அவர் மீது சுங்கச் சட்டம் மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் துபாயில் இருந்து புறப்பட்டு வங்கதேச தலைநகர் டாக்கா, கொல்கத்தா வழியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு நேற்று வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக, சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததால், சுங்க அதிகாரிகள், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு விரைந்து வந்து, அந்த விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பயணி ஒருவர், துபாயிலிருந்து இந்த விமானத்தில் சென்னைக்கு வந்திருந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது அவருடைய உடைமைகளை சோதித்தனர்.

உடைமைகளில் எதுவும் இல்லை. இதை அடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று, முழுமையாக பரிசோதித்த போது, அவர் தங்கப் பசையை, சிறிய 3 உருண்டைகளுக்குள் அடைத்து,உடலின் பின் பகுதி, ஆசன வாயுக்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அந்தப் பயணியை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பாதுகாப்புடன் அந்த உருண்டைகளை, வெளியில் எடுத்தனர்.

அவைகளை பிரித்துப் பார்த்தபோது, அதனுள் 409 கிராம் தங்கப் பசை இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.38 லட்சம். இதை அடுத்து தங்கப் பசையை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று நள்ளிரவில், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பயணியின் சூட்கேசில், சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் மார்க் செய்து, அந்த சூட்கேஸை மீண்டும் ஸ்கேன் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர். அதன்படி சுங்க அதிகாரிகள் அந்த சூட்கேஸை ஸ்கேன் செய்து பார்த்தபோது, சிறிய தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். சூட்கேசுக்குள்ரூ.14 லட்சம் மதிப்புடைய 150 கிராம் தங்கக் கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதோடு அந்தப் பயணியையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் சென்னையைச் சேர்ந்த ஒரு பயணியின் சூட்கேசில், மறுபடியும் ஸ்கேன் பண்ணும் படி மார்க் செய்யப்பட்டிருந்தது. எனவே அந்த சூட்கேஸை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அதற்குள்ளும்,ரூ.14 லட்சம் மதிப்புடைய, 150 கிராம் கிராம் தங்கம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அந்தப் பயணியை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் துபாய், சிங்கப்பூரில் இருந்து, கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.66 லட்சம் மதிப்புடைய,
709 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, மூன்று பயணிகளை, கைது செய்து விசாரணை நடத்துவதோடு, தாய்லாந்து நாட்டிலிருந்து சட்ட விரோதமாக கடத்திக் கொண்டு வரப்பட்ட மலேசியா, இந்தோனேசியா நாடுகளின் அபூர்வ வகை குரங்குகள் இரண்டையும் பறிமுதல் செய்து, அவைகளை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்பினர். அதோடு குரங்குகளை கடத்தி வந்த பயணியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.