• Thu. Apr 25th, 2024

அரசியலுக்கு வராத ரஜினி அறிவிப்பும்.. தமிழருவியின் வருத்தமும்

ரஜினிகாந்த் அரசியல் வரவில்லை என சொல்லி ஓராண்டுக்கு மேல் ஆகியும் தமிழருவி மணியன் அதுகுறித்து இன்றளவும் மன வேதனையில் இருப்பது அவரது அறிக்கை மூலம் தெரிகிறது.
ரஜினிகாந்தை அரசியலுக்கு வருமாறு நீண்ட காலமாக ரசிகர்கள் அழைத்து வந்தனர். அதன்படி ரஜினி ரசிகர் மன்றத்தினருடன் ஆலோசனையில் இருந்த ரஜினிகாந்த், கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்.
அன்றைய தினம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் பேசிய போது 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம். அரசியல் கட்சியை தொடங்குவதற்கான அனைத்து விஷயங்களும் ரெடியாக உள்ளது. அம்பு எய்துவது மட்டும்தான் பாக்கி என்றும் அறிவித்திருந்தார்.

இது 2018-ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு பரிசாக ரசிகர்களுக்கு இருந்தது. இதையடுத்து ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது. கட்சியை தொடங்கி 2019 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் ரஜினி மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கட்சி தொடங்காமலேயே இருந்தார்.
நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் கட்சிக்கு வாக்களியுங்கள் என ரஜினி வாய்ஸ் கொடுத்திருந்தார். இதையடுத்து 2020 டிசம்பர் மாதம் ஆம் ஆண்டு ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கட்சியின் பெயர் , சின்னம் குறித்து டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும். ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என அறிவித்தார். மேலும் தனது கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தியையும் ஆலோசகராக தமிழருவி மணியனையும் நியமிப்பதாக ரஜினி தெரிவித்தார்.

இதனால் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் ரஜினி கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் தனது படக்குழுவினருடன் ஹைதராபாத் சென்றிருந்தார். அப்போது அண்ணாத்த படக்குழுவில் இருந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ரஜினிகாந்திற்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

ரஜினிகாந்த் ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்ததால் கொரோனா பரவி வரும் நிலையில் அரசியலில் ஈடுபடுவதை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இதையடுத்து 3 நாட்கள் கழித்து மருத்துவமனையிலிருந்து சென்னை போயஸ் கார்டன் சென்ற ரஜினிகாந்த் , தமிழருவி மணியனை அழைத்து மருத்துவர்கள் அறிவுறுத்தியதை கூறி அரசியலுக்கு வர போவதில்லை என டிசம்பர் 28 ஆம்தேதி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அடுத்த நாளே “தற்போது தனது உடல்நிலையை கருத்தில் கொண்டும் அதன் பின் வரும் விளைவுகள் குறித்தும் முடிவெடுத்து, அரசியலுக்கு தற்போது வரவில்லை என தெரிவித்திருந்தார். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட மனவலி எனக்கு மட்டும்தான் தெரியும். அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்வேன் என தெரிவித்திருந்தார்.

தூய்மையான அரசியலை ரஜினி மூலம் எதிர்நோக்கி அவருக்காக திருச்சியில் மிக பிரம்மாண்ட மாநாடு நடத்திய தமிழருவி மணியனுக்கு இது மிகப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. இந்த நிகழ்வு நடந்து ஓராண்டுக்கு மேலாகியும் அந்த வருத்தம் அவருக்கு இன்னமும் இருக்கிறது என்பது அவரது அறிக்கை வாயிலாக அறியப்படுகிறது. மகான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வெளியிட்ட கண்டன அறிக்கையில் ரஜினி குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையின் கடைசி பாராவில், இன்றைய சினிமா உலகம் தவறுகளுக்கு தலைவாரிப் பூச்சூட்டுவதையே தன்னுடைய வேலையாகச் செய்து வருகிறது. இந்தப் பாழ்பட்ட சினிமா உலகத்தில் உள்ள ரஜினியைத்தானே நீ அரசியலுக்கு அழைத்தாய் என்று நீங்கள் என் மீது விமர்சனக் கணைகளை வீசலாம். தனி வாழ்வில் தூய்மை, பொது வாழ்வில் நேர்மை, வார்த்தைகளில் வாய்மை என்பதுதான் காந்தியம் வளர்த்தெடுத்த அரசியல். அந்த மேலான அரசியல் இந்த மண்ணில் சீரழிந்து கிடந்ததை என் 53 ஆண்டுப் பொதுவாழ்வில் பார்த்து அன்றாடம் மனம் வெதும்பியவன் நான். கெட்டுக் கிடக்கும் அரசியல் அமைப்பு முறையை நான் சரிப்படுத்துவேன் என்றார் ரஜினி. தமிழக மக்களிடம் சினிமாவுக்குள்ள மிகப் பெரும் செல்வாக்கையும் ரஜினிக்கிருந்த அளவற்ற ஆதரவையும் நான் விரும்பிய நல்ல அரசியலுக்கு பயன்படுத்த விரும்பினேன். முள்ளை முள்ளால் எடுப்பதும், வைரத்தை வைரத்தால் அறுப்பதும்தானே நம் முன்னோர் பயன்படுத்திய முறை! அந்த முயற்சி தோற்றுப் போனதில் எனக்கு ஆழ்ந்த வருத்தம் உண்டு! என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *