• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராஜேந்திர பாலாஜி!

By

Sep 2, 2021 ,

அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி நேற்று காலமானார். இவர் கடந்த ஒரு வாரமாக குடல் இறக்க பிரச்சனை காரணமாக பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை 6:45 மணி அளவில் சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 63. ஓ.பி.எஸ். மனைவியின் திடீர் மறைவு அதிமுக தொண்டர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த விஜயலட்சுமியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வி.கே.சசிகலா, வைகோ, கி.வீரமணி, சீமான், திருமாவளவன், கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

அதன் பின்னர் சென்னையில் இருந்து விஜயலட்சுமியின் உடலானது தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு காலை முதலே திமுக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஓ.பன்னீர்செல்வத்தை கட்டி அரவணைத்து ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெரியகுளத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயலட்சுமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கே.டி.ராஜேந்திர பாலாஜியுடன் முன்னாள் சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ.வான ராஜவர்மன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்