ராஜபாளையம் சொக்கர் கோயில் மாசி மக பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராஜபாளையத்தில் ராம்கோ குழுமத்துக்கு சொந்தமான நூற்றாண்டு பழமை வாய்ந்த சொக்கர் கோயிலில் ஆண்டு தோறும் மாசி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை ராம மந்திரம் இல்லத்தில் கொடி கண் திறக்கப்பட்டு மேளதாளம் முழங்க கொடிப்பட்டம் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. நேற்று காலை 9 மணிக்கு சர்வ அலங்காரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கொடிமரம் முன் அழுந்தருளினர். கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. இரவு அம்பாள் சிம்ம வாகனத்திலும், சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் 7-ம் நாளான மார்ச் 9-ம் தேதி திருக்கல்யாணமும், 8-ம் நாள் தெப்ப உற்சவமும், 9-ம் நாள் தேரோட்டமும் நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலரான ராம்கோ சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா செய்து வருகிறார்.