திமுகவில் 1980-ல் இளைஞரணி தொடங்கப்பட்டது. மு.க ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்தார்.
2019 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் நிகழ்த்திய தாக்கம், ஊராட்சி சபை கூட்டங்களை ஒருங்கிணைத்த பாங்கு மற்றும் கழகத்தினரின் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் 2019-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி இளைஞர் அணியின் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அவர் செயலாளராக நியமிக்கப்பட்டதும் இளைஞர் அணியின் செயல்பாடுகள் புது உத்வேகம் அடைந்தன. புதிய இளைஞர்களைக் கழகத்தை நோக்கி அழைத்து வரவும், அரசியலில் அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரவும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பைத் தொடங்கினார்.
30 லட்சம் புது உறுப்பினர்கள் என்ற இலக்கோடு 2019 செப்டம்பர் 14-ம் தேதி இளைஞர் அணியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்கப்பட்டது. 25 லட்சத்துக்கும் அதிகமானோர் அவர் தலைமையை ஏற்று கழக இளைஞரணியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

தற்போது, தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பாக, மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமனம் செய்து வருகிறார். இந்நிலையில், கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில்
தேனி வடக்கு மாவட்ட செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஒப்புதலோடு, தேனி வடக்கு ஒன்றிய துணை அமைப்பாளராக பழனிசெட்டிபட்டி அண்ணா முதல் தெருவைச் சேர்ந்த ரா. அருள்வாசகன்- ஐ மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதை அடுத்து ஒன்றிய துணை அமைப்பாளர் அருள் வாசகன், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.