ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான திருமுக்குளத்தைத் தூய்மை செய்யும் பணியில் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஈடுபட்டது ஊர் மக்களின் பாராட்டைப் பெற்றது.

இங்கு உள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான திருமுக்குளம் ரெண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆனால் முறையான பராமரிப்பு பணி செய்யாததால் இக்குளம் மாசடைந்து, சேறாகிக் கலங்கியுள்ளது. இந்தப் புனிதக்குளத்தைத் தூய்மை செய்யுமாறு, குருஞான சம்பந்தர் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும், சமூக சேவகருமான டி.ஏ.எஸ். கிருஷ்ணன் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் வெங்கடாச்சாரி ஆகியோர் அறிவுறுத்தியதன் பேரில், பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

திருமுக்குளத்தின் கிழக்குப்படித்துறைகளில் மண்டியிருந்த முள்செடிகள், ஆமணக்கு மற்றும் பயனற்ற செடிகளை அனைத்தையும் 3௦ மாணவர்கள் ஒன்று சேர்ந்து வெட்டி வெளியேற்றினர். இதனால் படித்துறைகள் தூய்மையானது. நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் தலைவர்கள், கோகுல கண்ணன், கௌதம் முகேஷ், சிவபெருமாள், மணிகண்ட பிரபு, முனீஸ்வரன், ரகுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்





