• Thu. Apr 18th, 2024

புதுக்கோட்டையில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்தி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டியில் காவலர் பயிற்சி மையத்திலிருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்தி உயிரிழந்தான். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டி கிராமத்தில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. மலைகள், பாறைகள் நிறைந்த பகுதியில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 30ம் தேதி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குண்டு சுமார் 2கி.மீ. தூரம் தொலைவிற்கு பாய்ந்து சென்றது. அந்த குண்டு நார்த்தாமலையில் உள்ள ஒரு குடிசை வீட்டின் வாசலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த சிறுவன் புகழேந்தியின்(11) தலையின் இடதுபுறத்தில் பாய்ந்து சிறுவன் மயக்கமடைந்து விழுந்தான்.

அவனை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவக்குழுவினர் 31-ம் தேதி 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் தலையில் இருந்த குண்டை அகற்றினர். CISF வீரர்கள் துப்பாக்கிசுடும் பயிற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி(11) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் நிரந்தரமாக மூடப்படும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *