ஆந்திராவில் காலாவதியான மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்யும் புதுச்சேரி மருந்து கம்பெனிகள் அவற்றை புதிதாக பேக்கிங் செய்து விற்பனை செய்து வருவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பகிர் புகார் தெரிவித்துள்ளார்

திருக்கனூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் உலக நுகர்வோர் தின விழா திருக்கனூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் முத்துரங்கம் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தொடர்ந்து நுகர்வோர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு, கட்டுரை, மற்றும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற பல்வேறு பிரிவு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
விழாவில் புதுச்சேரியில் பெருகிவரும் இணைய வழி குற்றங்கள் மற்றும் நுகர்வோர் எவ்வாறு பாதுகாப்பாக பொருள்களை வாங்க வேண்டும் என்பது குறித்து பள்ளி மாணவி மோகித் சாய் உரையாற்றினார்.
இதனை அடுத்து விழாவில் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி..
புதுச்சேரியில் சுற்றுலா என்ற பெயரில் வார இறுதி நாட்களில் உள்ளூர் மக்கள் வெளியில் நடமாடியாத நிலை ஏற்பட்டுள்ளது, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நெல்லித்தோப்பு லெனின் வீதியில் மட்டும் 80 பிரியாணி கடைகளும் அண்ணா சாலையில் 40 பிரியாணி கடைகள் உள்ளது.
இவர்களுக்கு யார் அனுமதி அளித்தது இவர்கள் தரமான உணவுகளை வழங்குகிறார்களா,அரசு அங்கீகாரம் அளித்துள்ளதா என்று கேள்வி எழுப்பிய நாராயணசாமி இதை நுகர்வோர் அமைப்புகளும் கண்டு கொள்வதில்லை, எப்படி நுகர்வோரை ஏமாற்றலாம் என்ற நோக்கிலே இவர்கள் செயல் படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

புதுச்சேரியில் உள்ள மருந்து கம்பெனிகள் ஆந்திராவில் காலாவதியான மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்து புதியதாக பேக் செய்து கடைக்கு விற்பனைக்கு அனுப்புகிறார்கள் என்று புகார் தெரிவித்த நாராயணசாமி, புதுச்சேரியில் விற்கப்படும் அரிசி, முட்டை,மளிகை, உள்ளிட்ட உணவு பொருட்களில் கலப்படங்கள் செய்து நுகர்வோர்களை ஏமாற்றுகிறார்கள், எனவே பொருட்களை வாங்கும் போது நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
விழாவில் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி முத்துவேல், மற்றும் நுகர்வோர் அமைப்பை சார்ந்த சுரேஷ், பரமசிவம், செந்தில்வேலன், உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மாணவ மாணவிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.