மும்பை தனியார் நிறுவன கப்பல் உரிமையாளரை கண்டித்து புதுச்சேரி மீனவர்கள் வேலை நிறுத்தம்,300-க்கும் மேற்பட்ட படகுகள் தேங்காய் திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
மும்பை தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் புதுச்சேரி கடல் பகுதியில் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 27 ஆம் தேதி மணல் அள்ளும் பணியின் போது முகத்துவாரத்தில் கப்பல் தரை தட்டியதால் கப்பலின் உதிரி பாகங்கள் சேதமடைந்து உடைந்து கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடலில் விழுந்த உதிரி பாகங்களை கப்பல் நிறுவனத்தின் ஊழியர்கள் அகற்றாமல் சென்று விட்டனர்.

இது பற்றி தகவல் அறியாத புதுச்சேரி மீனவர்கள் விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர், அப்போது முகத்துவாரப் பகுதியை கடக்கும்போது படகுகள் சேதம் அடைந்து, தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடையவே சந்தேகம் அடைந்த மீனவர்கள் முகத்துவார பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது மணல் அள்ளும் கப்பலின் உதிரி பாகங்கள் முகத்துவாரப் பகுதியில் சிக்கி இருந்தது தெரிந்தது.
இந்த நிலையில் உதிரி பாகங்களை அகற்றாத மும்பை கப்பல் நிறுவனத்தின் உரிமையாளரை கண்டித்தும், சேதமடைந்த படகுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனால் மீன் பிடி தொழிலுக்கு செல்லாமல் 300-க்கும் மேற்பட்ட படகுகள் தேங்காய் திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசைப்படகு உரிமையாளர்களின் சங்கத் தலைவர் ஜெயராஜ் கூறும்போது…

தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மணல் அள்ளும் கப்பலின் உதிரி பாகங்கள் உடைந்து கடலிலே விழுந்ததை அகற்றாமல் சென்றுள்ளனர். இதனால் படகுகளில் மீன்பிடிக்க செல்லும்போது புதுச்சேரி மீனவர்களின் 11 விசைப்படகுகள் சேதமடைந்துள்ளது, சேதமடைந்த படகுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,முகத்துவார பகுதியில் இருக்கும் கப்பலின் உடைந்த உதிரி பாகங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.