• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

மின்தடையால் பொதுமக்கள் அவதி..,

ByS.Ariyanayagam

Apr 29, 2026

திண்டுக்கல் மாவட்டத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் சித்தையன்கோட்டை, மல்லையாபுரம், எஸ்.பாறைப்பட்டி, வீரக்கல், வண்ணம்பட்டி, கரிசல்பட்டி, தருமத்துப்பட்டி, கோனுார், வெல்லம்பட்டி, கசவனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முன்னறிவிப்பற்ற மின்தடை ஏற்படுகிறது.

சில நிமிடங்கள் இடைவெளியில் தொடர்ந்து பல மணிநேரம் நிறுத்தப்படுகிறது. இருமுனை மின் வினியோகத்தை மும்முனையாக மாற்றும் நேரங்களில் அடுத்தடுத்து குறைந்தழுத்த வினியோகம் வழக்கமாகி விட்டது. இதனால் பெரும்பாலான கிராமங்களில் வீட்டு உபயோக பொருட்கள் பழுதடைகிறது. பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் அடிக்கடி நீண்டநேர மின்தடை ஏற்படுகிறது. ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் முடங்குகிறது. ரேஷன் கடை, உள்ளாட்சி அமைப்புகள் உள்பட கணினி சார்ந்த அரசு, தனியார் நிர்வாக பணிகள், வணிக நிறுவனங்கள் பாதிக்கின்றன.

அதிகாரிகளின் அலட்சியத்தால் நீடிக்கும் அவதிக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குஜிலியம்பாறை: திருக்கூர்ணம் ஊராட்சி பகுதிக்கு சத்திரப்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு மும்முனை மின்சாரம் விநியோகம் சீராக இல்லை. குறைந்தழுத்த மின் விநியோகத்தால் மோட்டார் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைகின்றன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். சத்திரப்பட்டியில் தற்போது 33 கே.வி.,யாக உள்ளதை 1.10 கே.வி.,யாக மாற்ற வேண்டும். திருக்கூர்ணம் ஊராட்சி பகுதிக்கு தனி லைன் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.