• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விக்கிரமங்கலம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ByN.Ravi

Feb 28, 2024

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்பட்டு வருகின்றனர். பள்ளியின் கட்டிடம் பழுதடைந்த நிலையில், கட்டிட சுவர்கள் அவ்வப்போது பெயர்ந்து விழுவதும் மழைக்காலங்களில் ஈரப்பதம் ஏற்பட்டு சுவரின் மேற்பகுதி பெயர்ந்து விழுந்து உள்ளே இருக்கும் கட்டுக் கம்பிகள் தெரிந்த நிலையிலும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் .
இங்குள்ள சமையல் கூடமும் பாதுகாப்பற்ற முறையில் உள்ளதாகவும், மழைக்காலங்களில் மின் கசிவு ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளதாகவும் ஆகையால், புதிய சமையல் கூடத்தையும் கட்டித் தர வேண்டும் என, கோரிக்கை வைக்கின்றனர். ஆகையால், பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய கட்டிடத்தை கட்டி வகுப்பறைகளை மாற்ற வேண்டும் என்றும் இங்கு பயிலும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். இதே போல், அருகில் இருந்த அங்கன்வாடி மையத்தை இடித்து நான்கு ஆண்டுகளாகியும் ,புதிய அங்கன்வாடி மையம் கட்டாததால், தற்போது வரை சமுதாய கூடத்தில் அங்கன்வாடி செயல்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ,இதனால் விரைவில் அங்கன்வாடி மையம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும், சமுதாயக்கூடத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருவதால் ஊராட்சி மன்ற நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்களின் சுப நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் தெருவோரங்களில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.