• Mon. Apr 29th, 2024

சோழவந்தான் இரும்பாடி, கருப்பட்டி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ByKalamegam Viswanathan

Dec 26, 2023

மதுரை மாவட்டம் , வாடிப்பட்டி ஒன்றியம், இரும்பாடி கருப்பட்டி ஊராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அங்கு சுகாதார நிலையம் அமைத்தால், இரும்பாடி கருப்பட்டி நாச்சிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட இரும்பாடி ,கருப்பட்டி, பாலகிருஷ்ணாபுரம் கணேசபுரம், பொம்மன்பட்டி, கரட்டுப்பட்டி கீழ்நாச்சிகுளம், மேல் நாச்சிகுளம், சாலட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பயன்பெறுவர். இந்த மூன்று ஊராட்சிகளுக்கும் சேர்த்து கருப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சரியான இடம் உள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர் .மேலும், கடந்த 1972 ஆம் ஆண்டு வரை ரோட்டரி சங்கத்தின் சார்பில் சிறிய மருத்துவமனை ஒன்று கட்டப்பட்ட இடம் சுமார் 72 சென்ட் உள்ளதாகவும்,
இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்றும் ,இரும்பாடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் ஐந்து முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இது குறித்து, மதுரையின் ஆட்சியர்களாக இருந்த விஜய் ,அனீஸ் சேகர், மற்றும் தற்போதைய ஆட்சியர் சங்கீதா அவர்களிடம் மனு அளித்ததாகவும் கூறுகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரிடமும் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியரத்திடமும் கோரிக்கை வைத்ததாக கூறுகின்றனர். இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அமைப்பதால் இரும்பாடி கருப்பட்டி நாச்சிகுளம் ஊராட்சியில் முறையே சுமார் 850, 1250, 1200 குடும்ப அட்டைதார்களுக்குட்பட்ட சுமார் 25 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறுவர். மேலும் ,தற்போது இந்த மூன்று ஊராட்சிகளை சேர்ந்த கர்ப்பிணிகள் வார சிகிச்சைக்காக மன்னாடிமங்கலம் சுகாதார நிலையத்திற்கும் சோழவந்தானுக்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது இதனை கருத்தில் கொண்டு கருப்பட்டி திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள 72 சென்ட் இடத்தில் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்என கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ, பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தங்களது நிதியிலிருந்து கணிசமான தொகையை ஒதுக்கி நேரில் ஆய்வு செய்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு, ஆவண செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *