திருப்பரங்குன்றத்தில் பொதுமக்களிடம் துண்டு அறிக்கை வழங்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் மத வேறுபாடுகள் கடந்து மனிதநேயம் வளர்ப்போம். திருப்பரங்குன்றம் பெருமைகளைப் பாதுகாப்போம் விஷம் கற்கும் மதவாத பிரச்சாரத்தை ஒதுக்கி வைப்போம். அமைதியை நிலவும் நமது பாரம்பரியத்தை காப்போம் என்ற துண்டறிக்கையை இன்று பொதுமக்களிடம் வழங்க இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் முடிவு செய்திருந்தது.
அதன்படி திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை அருகே உள்ள கேபிஜே அரங்கில் இருந்து சங்க நிர்வாகிகள் துண்டு அறிக்கையை வழங்க கிளம்பினர். அப்போது திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் மதுரை வீரன் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்..பொதுமக்களிடம் துண்டறிக்கையை வழங்கக் கூடாது என்று இன்ஸ்பெக்டர் மதுரை வீரன் தடுத்து நிறுத்தினார்.மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். ஆனால் செய்யவில்லை. இதனால் ,நாங்கள் அந்த முயற்சி செய்யும் போது நீங்கள் தடுக்கிறீர்கள்? திருப்பரங்குன்றத்தில் இவ்வளவு பிரச்சனைக்கும் நீங்கள் தான் காரணம்.ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாக நீங்கள் செயல்படுகிறீர்கள் என்று இன்ஸ்பெக்டர் மதுரை வீரன் மீது குற்றம் சாட்டினர்.ஆனால் அதை அவர் பொருட்படுத்தாமல் நிர்வாகிகள் கையில் இருந்த துண்டறிக்கையை பறிக்க ஆரம்பித்தார். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அத்துடன் அரங்கத்தை விட்டு வெளியே வந்தால் கைது செய்வோம் என்று இன்ஸ்பெக்டர் மதுரை வீரன் மிரட்டினார்.மக்கள் ஒற்றுமையைக் காக்க நாங்கள் கைதாக தயாராக இருக்கிறோம் என்று சங்க நிர்வாகிகள் கூறினர். அத்துடன் பொதுமக்களிடம் கட்டாயம் துண்டறிக்கையை சேர்ப்போம் என்று கூறிவிட்டு தெருவில் இறங்கி கொடுக்க ஆரம்பித்தனர். “உடனடியாக போலீசார் அவரிடம் இருந்த துண்டறிக்கையை பறித்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் கே. சாமுவேல் ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் வெண்புறா, புறநகர் மாவட்ட செயலாளர் லெனின், மாநகர் தலைவர் இளங்கோ கார்மேகம், திருப்பரங்குன்றம் கிளை நிர்வாகிகள் காமாட்சி, தியாகராஜன், வாலிபர் சங்க தலைவர்கள் தமிழரசன், கருப்பசாமி, பாவெல்,செல்வா, வேல்தேவா, மாணவர் சங்க நிர்வாகி தீலன், மாதர் சங்க நிர்வாகிகள் பிரேமா,சசிகலா, லதா, விஜயா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்த நிலையில் காவல்துறை அதிகாரி சசிபிரியா தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து துண்டறிக்கை வழங்குவது நிறுத்தப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.