காரைக்காலில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியனை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை கண்டித்தும் அனைத்து விவசாயிகள் நல சங்கங்கள் சார்பில் காரைக்காலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தின்போது ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சொத்துக்களை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து போலீசார் அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


இந்த நிலையில் கைது செய்த பி.ஆர்.பாண்டியனை விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை கண்டித்தும் காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகள் நல சங்கங்கள் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது பி.ஆர். பாண்டியன் மீது போடப்பட்ட வழக்கை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




